தெற்கு காசாவின் ரபா நகரில் இடம்பெற்று வரும் தீவிர மோதல்கள் கிட்டத்தட்ட முடிவை எட்டி இருப்பதாகவும், ஆனால் அது போர் முடிவுக்கு வந்தாக அர்த்தமில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பை அதிகாரத்தில் இருந்து முழுமையாக வெளியேற்றும் வரை போரைத் தொடர்வதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இதில் ஹிஸ்புல்லாவுடனான பரஸ்பர மோதல் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் லெபனானுடனான எல்லைப் பகுதியில் விரைவில் துருப்புகளைநிலை நிறுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘முடிவில் இரண்டு விடயங்களை செய்ய வேண்டி உள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவமயமற்ற நிலையை மேற்கொள்ள வேண்டி இருப்பதோடு சிவில் நிர்வாகம் ஒன்றை நிறுவ வேண்டி உள்ளது. பிராந்தியத்தில் உள்ள குறிப்பிட்ட நாடுகளின் ஆதரவு மற்றும் நிர்வாகத்துடன் அதனை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.
முன்னோக்கிச் செல்வதற்கு சரியான வழி இது என்று நான் நம்புகிறேன்’ என்று இஸ்ரேலிய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் நெதன்யாகு வலியுறுத்தினார்.
‘பலஸ்தீன நாடு ஒன்றை நிறுவுவதற்கு நான் தயாரில்லை. பலஸ்தீன அதிகார சபையிடம் (காசாவை) கையளிக்க நான் தயாரில்லை’ என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
பிரதான வலதுசாரி தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நெதன்யாகு பேட்டி அளித்திருந்தார். ஒக்டோபர் 7 இல் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் நெதன்யாகு அளித்த முதல் தொலைக்காட்சி நேர்காணலாக இது இருந்தது.
‘காசா பகுதியில் தீவிர நிலை முடிவுக்கு வந்த பின், பாதுகாப்பு நோக்கத்திற்காக சில படையினரை வடக்கில் இஸ்ரேல் மீண்டும் நிலைநிறுத்தவுள்ளது’ என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.
லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்புடன் முழு அளவில் போர் வெடிக்கும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே நெதன்யாகு இதனைத் தெரிவித்துள்ளது.
காசாவில் எட்டு மாதங்கள் கடந்தும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு இஸ்ரேலியப் படை எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவை கைப்பற்றும் படை நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. இஸ்ரேலியப் படை இன்னும் முழுமையாக நுழையாத ஒரே பகுதியாகவே ரபா உள்ளது.
இங்கு மோதல்கள் தீவிரம் பெற்றிருப்பதாகவும் இஸ்ரேல் தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் ரபா குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய தாக்குதல் ஒன்றில் காசா அம்புலன்ஸ் மற்றும் அவசரப் பிரிவு பணிப்பாளர் ஹனி அல் ஜபராவி கொல்லப்பட்டுள்ளார்.
‘மேற்கு ரபாவில் டல் அல் சுல்தானின் நிலை அபாயகரமாக உள்ளது. தமது வீடுகளை விட்டு வேளியேற முயற்சிப்பவர்களை இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் துரத்துவதோடு, மேலும் மேற்கில் அல்–மவாசியை மேற்பார்வையிடும் பகுதிகளை டாங்கிகள் தொடர்ந்து கைப்பற்றுகின்றன’ என்று ரபா குடியிருப்பாளர் ஒருவரான பசம், ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
‘வீதிகளில் மக்கள் கொல்லப்படுவது பற்றி எமக்குத் தெரியவருவதோடு ஆக்கிரமிப்பாளர்களால் பல டஜன் வீடுகள் அழிக்கப்படுவதை நாம் காண்கிறோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு காசாவில் படையினர் பல மாதங்களுக்கு முன்னரே படை நடவடிக்கையை நிறைவு செய்ததாக இஸ்ரேல் கூறியபோதும் காசா நகரின் செய்தூன் புறநகர் பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகள் மீண்டும் ஒருமுறை முன்னேறி வருவதாகவும் பல பகுதிகளில் சரமாரி தாக்குதல்களை நடத்துவதாகவும் அங்குள்ள குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர்.
இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 37,600ஐ எட்டி இருப்பதோடு 86 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காசாவில் 21,000 வரையான பலஸ்தீனர்கள் காணாமல்போயிருப்பதாக சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் இடிபாடுகளில் சிக்கி மரணித்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படும் 4,000 வரையான சிறுவர்கள் உள்ளடங்குவதோடு 17,000 சிறுவர்கள் துணையின்றி மற்றும் அவர்களது குடும்பங்களை விட்டு பிரிந்துள்ளனர் என்று அந்தத் தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அறியப்படாத எண்ணிக்கையானோர் அடையாளம் இடப்படாத புதைகுழிகளில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அதேநேரம், மற்றவர்கள் இஸ்ரேலிய படைகளால் வலுக்கட்டாயமாக காணமலாக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.