நோர்வூட் பகுதியில், பால் சேகரிக்கும் லொறியிலிருந்து தவறி விழுந்து 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயின்று வந்த வெஞ்சர் தோட்டம், 50 ஏக்கர் பிரிவைச் சேர்ந்த விஜயகுமார் ஹர்ஷனி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று 25ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கரோல் பயிற்சி நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாலை சுமார் 4 மணியளவில், பால் சேகரிக்கும் லொறியின் பின்புறத்தில் ஏறிப் பயணித்துக் கொண்டிருந்த மாணவி, வீட்டுக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது லொறியிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி, அதே தோட்டத்தைச் சேர்ந்த ஏனைய பாடசாலை மாணவர்களுடன் தினமும் பாடசாலை முடிந்து வீடு திரும்புவதற்காக இந்த லொறியைப் பயன்படுத்தி வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பால் சேகரிக்கும் கொள்கலன்கள் மீது அமர்ந்து பயணித்த மாணவி, எதிர்பாராத விதமாக லொறியிலிருந்து கீழே விழுந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் நோர்வூட் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
