லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக 8 தமிழ் அரசியல் கைதிகள் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் ஆயுதமுனையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மேற்கொண்ட அராஜகச் செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் ஏற்பாட்டில் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா ஊடாக இந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பூபாலசிங்கம் சூரியபாலன், மதியரசன் சுலக்சன், கணேசன் தர்ஷன், கந்தப்பு கஜேந்திரன், இராஜதுரை திருவருள், கணேசமூர்த்தி சிதுர்ஷன், மெய்யமுத்து சுதாகரன், ரி.கந்தரூபன் ஆகிய தமிழ் அரசியல் கைதிகளே அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதில் எதிர் மனுதாரர்களாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் எம்.எச்.ஆர். அஜித், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என். உபுல்தெனிய, நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மேற்படி மனுவை நாளை அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவுள்ளனர்.

Related Articles

Latest Articles