வங்கிக்கடன் தவணை செலுத்த முடியாதவர்களுக்கு நிவாரண காலம் அறிவிப்பு!

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வங்கிக் கடன்களை செலுத்த முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

6 மாதத்திற்கு இரு தடவைகளாக அவற்றை செலுத்துவதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மத்திய வங்கியினால் வங்கிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க கடனை மீளச் செலுத்துவதற்கு ஆறு மாத கால சலுகை வழங்குவது, முறைப்படியான செயற் திட்டத்தின் மூலம் வங்கிக் கடனை அறவிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலத்தை நீடிப்பது, மற்றும் செயற்படாத கடனை செலுத்தவுள்ளோரின் பட்டியலில் உள்ளோர் புதிய கடன்களை பெற்றுக் கொள்ளும்போது கடன் தகவல் பிரிவில் சலுகையுடனான மதிப்பீடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள மத்திய வங்கி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேற்படி வேலைத் திட்டம் தொடர்பில் விளக்கமளித்துள்ள மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி. எம். ஜே. வை. பி. பெர்னாந்து:

அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் பல்வேறு கடன் நிவாரண வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கம் அது தொடர்பில் மத்திய வங்கியுடன் மிகவும் நெருக்கமாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்த வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் கட்டி யெழுப்புவதற்காக கடன் சலுகைகள் வழங்கப்பட்டன.

அதன் பின்னர் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் இயல்பு நிலையை கட்டியெழுப்புவதற்காக கடன் சலுகைகள் வழங்கப்பட்டன.

அதனையடுத்து தற்போது உருவாகியுள்ள பொருளாதார பாதிப்புகளினால் உரிய முறையில் கடன்களை செலுத்த முடியாதுள்ளவர்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடன் சலுகை வழங்கப்படவுள்ளது. அதன்படி கடன்களை மீள செலுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வங்கிக் கட்டமைப்புகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாடிக்கையாளர்களும் வங்கிகளில் தமக்கான கடன் சலுகையை கோரி வேண்டுகோள் விடுக்க முடியும். எனினும் அந்த வேண்டுகோள் இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவ்வாறான வேண்டுகோள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருத்தமான வகையில் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு வங்கிகள் வாடிக்கையாளர்களுடன் இணைக்கப்பாடு ஒன்றை மேற்கொள்ளும். அவ்வாறு கடன் சலுகைகளை பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர்களால் முடியாத பட்சத்தில் அவர்கள் மத்திய வங்கியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர் சேவை பிரிவில் தமக்கு பொருத்தமான கடன் சலுகைகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles