‘வங்குரோத்து வேட்பாளர்களின் வெத்து அரசியல் கண்டியில் எடுபடாது’

கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வங்குரோத்து வேட்பாளர்களின் சேறுபூசும் அரசியலானது, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சவாலாக அமையாது.வாக்காயுதம்மூலம் இம்முறையும் சாதனை படைக்க கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டுவிட்டனர். அதுமட்டுமல்ல வெத்து வேட்பாளர்களுக்கும் தக்கபாடம் புகட்டுவார்கள் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் வேலுகுமாருக்கு நாளாந்தம் மக்கள் ஆதரவு அதிகரித்துவருகின்றது.இந்நிலையில் கம்பளை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

“ 2015 இல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் மூலம்தான் 15 ஆண்டுகளுக்கு பிறகு கண்டி மாவட்டத்துக்கான தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்கள் வென்றெடுத்தனர். இதற்கு முஸ்லிம் சகோதரர்களும் ஒத்துழைப்பு வழங்கினர்.

இந்நிலையில் கடந்த நான்கரை வருடங்களில் என்னால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள்மூலம் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்துவத்தையும் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளதுடன், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது தமக்கான உரிமை, அடையாளம் என்ற உணர்வும் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே, இம்முறை மக்கள் வரலாற்று சாதனை படைப்பார்கள் என்பது உறுதி.

இதனால் கதிகலங்கிபோயுள்ள சில பேரினவாதிகள், தமிழர்களின் சாதனையை தடுப்பதற்காக பிறப்பால் மட்டுமே தமிழர்களான சில வெத்து வேட்பாளர்களை தேர்தலில் களமிறங்கியுள்ளனர். அவர்கள் ஊடாக சேறுபூசும் அரசியலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கைக்கூலிகளை காசுகொடுத்து வாங்கி, மேலும் சிலரை சம்பளத்துக்கு அமர்த்தி போலியான தகவல்கள் பரப்பட்டுவருகின்றன. இவற்றை நம்புவதற்கு மக்கள் தயாரில்லை. இருந்தாலும் விழிப்பாகவே இருக்கவேண்டும்.

நேருக்கு நேர் அரசியலில் மோத முதுகெலும்பில்லாதவர்களே, சேறுபூசி அதன் ஊடாக தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சவாலுக்குட்படுத்தலாம் என நினைக்கின்றனர். அவர்களின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது.” – என்றார்.

Related Articles

Latest Articles