“ மாகாணசபை முறைமை ஊடாக தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என தமிழ் மக்கள் கருதும்பட்சத்தில் அந்த வியூகம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன், வடக்கில் அரசியல் பிரச்சினை, மக்கள் பிரச்சினையென இரு பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்பட வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், வடக்கில் மீண்டுமொரு போர் ஏற்படாது, புலிகள் மீண்டெழுவார்கள் என தெற்கில் மாயை உருவாக்கப்படுகின்றது, அதற்கான சாத்தியமும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம், 13 பிளஸ் என்றெல்லாம் கதைக்கப்படுகின்றது. மாகாணசபை முறைமை இதற்கு தீர்வு அல்ல என்றே நாம் கருதுகின்றோம். எனினும், மாகாணசபை முறைமை தற்போது அம்மக்களின் (தமிழ் மக்களின்) உரிமை. எனவே, அதனை தற்போது இல்லாது செய்ய முடியாது. அப்படியானால் தற்போது என்ன செய்ய வேண்டும்?
மாகாணசபை முறைமை தமது அரசியல் உரிமையென அம்மக்கள் (தமிழ்மக்கள்) ஏற்கின்றனர் எனில், அதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து அதனை அம்மக்களின் உரிமையாக உறுதிப்படுத்த வேண்டும். நாம் அதைச் செய்வோம். இந்த முறைமை தீர்வா, இல்லையா என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும்.
தமது அரசியல் உரிமைகளை பாதுகாக்கப்படும் வியூகம் மாகாணசபை முறைமையென மக்கள் கருதினால் அதனை நாம் பாதுகாக்க வேண்டும்.
எமது நாட்டில் வடக்கில் மீண்டுமொருமுறை யுத்தம் ஏற்படவே ஏற்படாது. வடக்கில் உள்ள பெற்றோர், போருக்காகவே பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்ற மாயை தெற்கில் தோற்றுவிக்க முற்படுகின்றனர். அதன்காரணமாகவே புலிகள் மீண்டெழுவார்கள் என்றெல்லாம் கதைகள் கூறப்படுகின்றனர். அவ்வாறு நடக்காது.
வடக்கில் உள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை போருக்கு அனுப்ப முற்படவில்லை. தெற்கில் உள்ள பெற்றோர்போலவே கல்வி வழங்கவும், சிறந்த தொழிலை பெற்றுக்கொடுக்கவும், சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்வுமே எதிர்பார்க்கின்றனர். அதற்கான கதவு மூடப்பட்டுள்ளது. தெற்கில்போன்று வடக்கிலும் பிரச்சினைகள் உள்ளன. 30 வருடகால போரால் வடக்குக்கான நிறைய வாய்ப்புகள் இல்லாமல்போயுள்ளன. எனவே, அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த துரிதமான அபிவிருத்தி வேலைத்திட்டம் அவசியம். ஏனெனில் 30 வருடங்கள் இழக்கப்பட்டுள்ளன.
அரசியல் பிரச்சினை மற்றும் மக்கள் பிரச்சினைகள் என இரண்டுக்கும் தீர்வுகள் அவசியம். வடக்குக்கு சென்றாலும், தெற்கில் இருந்தாலும் இதையே நாம் கூறிவருகின்றோம். வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்களுடன் இது சம்பந்தமாக பேச்சு நடத்த தயார்.” – என்றார்.
