வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை

01.01.2026 இலிருந்து வடக்கு மாகாணம் முழுவதிலும் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழையிலையைப் பயன்படுத்துவது மற்றும் உணவுத்தட்டுக்களை கொதிக்க வைப்பது ஆகியவற்றை பின்பற்றலாம் என்றும் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ மேயர்கள், கௌரவ தவிசாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர சபைகளின் மேயர்கள், நகர சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (07.10.2025) நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், பிரதேச சபைகளில் பணியாற்றுபவர்களின் எண்ணங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மக்கள் பல்வேறு அனுமதிகள் தாமதமடைவதாக சுட்டிக்காட்டுகின்றார்கள். மக்களுக்கான சேவைகளை துரிதமாக செய்து கொடுக்க வேண்டும். தவிசாளர்களும், செயலாளர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் ஊடாகவே அபிவிருத்தி சாத்தியமாகும்.

திண்மக் கழிவு அகற்றல் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சவாலாகி வருகின்றன. திண்மக் கழிகளை தரம்பிரிக்கும் நிலையங்களை ஒழுங்காக செயற்படுத்தாதன் காரணமாக மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிடுகின்றார்கள். எனவே அது தொடர்பில் சபைகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவழிப் பாதைகளை அறிமுகப்படுத்தல், கனரக வாகனங்களின் பாவனைக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியனவற்றை செயற்படுத்தவேண்டும். இது தொடர்பில் பொலிஸாரின் ஒத்துழைப்பு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பெற்றுத்தரப்படும்.

எதிர்வரும் மழை காலத்துக்கு முன்னர் சபைகளுக்கு உட்பட்ட அனைத்து வாய்க்கால்கள், மதகுகளை துப்புரவு செய்யுங்கள். சில சபைகள் ஏற்கனவே எங்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவான நடவடிக்கையை எடுத்துள்ளன. அதை ஏனைய சபைகளும் செய்ய வேண்டும். அதேநேரம், வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக அமைந்துள்ள சட்டமுரணான கட்டுமானங்களை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கட்டங்களுக்கான குடிபுகு சான்றிதழைப் பெற்றுக் கொள்வதை கட்டாயமாக்குவதுடன் அவ்வாறு பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆரம்பிக்கவேண்டும். அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான கடைகள் பல உரிமம் மாற்றம் செய்யப்படாமல் நீண்ட காலமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு விரைவான பொறிமுறையைத் தயாரிக்கவேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்கள் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு விதமான முதலீட்டாளர்களையும் ஈர்க்கவேண்டும். முதலீட்டாளர்கள் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள இழுபறிகள் காரணமாக திரும்பிச் செல்கின்றனர். எனவே உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதலீட்டாளர்களை ஈர்த்துக்கொள்ளவேண்டும். இதேநேரம், முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகையை வழங்குவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் தங்களின் சபைத் தீர்மானத்துடன் உரியவாறு அனுப்பி வைத்தால் அனுமதி வழங்க முடியும்.

அதேபோல தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய சுகாதார வசதிகளைக் கொண்டிருப்பதில்லை. பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக அவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சபைகள் தங்களின் வருமானங்களை உயர்த்தும் வகையில், மிக நீண்ட காலம் மேற்கொள்ளப்படாதுள்ள சோலை வரி மீளாய்வை துரிதமாகச் செய்து முடிக்க வேண்டும். அதைப்போல உள்ளூராட்சி மன்றங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடமாடும் சேவைகள் மக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும். சபைகள் தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட மயனாங்களின் எல்லைகளை உரியமுறையில் அடையாளப்படுத்தி அவற்றை அழகுபடுத்தவேண்டும். அதேபோன்று தங்கள் பிரதேச எல்லைக்குள் மரம் நடுகையை ஊக்குவிக்கவேண்டும். ஏற்கனவே தன்னார்வமாக செயற்படுவதற்கு தயாராகவுள்ள நிறுவனங்களுடன் இணைந்து அதனைச் செயற்படுத்தலாம்.

வாகனப் பாதுகாப்பு தரிப்பிடங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படுவதுடன் அங்கு ரசீது வழங்குபவர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

இறைச்சிக்கடைகள் குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாணத்தில் சில பிரச்சினைகள் உள்ளமையை தவிசாளர்கள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர். இறைச்சிக்கடைகள் கேள்விகோரப்படும்போது செயற்கையாக அதிக தொகை நிர்ணயிக்கப்படுகின்றது என்றும் இதனால் இறைச்சியின் விற்பனை விலை அதிகரிக்கின்றது எனவும் குறிப்பிட்டனர். வடக்கு மாகாண ரீதியான ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ளுமாறு ஆளுநரைக் கோரினர். வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துடன் கலந்துரையாடி இந்த விடயத்தை ஒழுங்குபடுத்துவதாக ஆளுநர் பதிலளித்தார்.

சந்தைகளில் விவசாயிகளின் கழிவுப் பிரச்சினை தொடர்பிலும் ஆராயப்பட்டது. அதை நடைமுறைப்படுத்துவதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் பேசப்பட்டது. டிஜிட்டல் விலைப் பலகையைக் காட்சிப்படுத்தி ஏனைய சந்தைகளிலுள்ள விலை நிலவரங்களை தெரியப்படுத்துவதன் ஊடாக இடைத்தரகர்களை இல்லாமல் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் சந்தைக் கழிவு முறைமையை நீக்குவதற்கு ஆளுநரால் அறிவிக்கப்படும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தயாராகவிருப்பதாகவும், சில இடங்களில் அதனைச் செயற்படுத்த பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுத் தரவேண்டும் எனவும் தவிசாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனத்தால், நீர் முகாமைத்துவம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களால் செய்யப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன. குறிப்பாக குழாய் கிணறுகள் வர்த்தக மற்றும் விவசாய நோக்கங்களில் அமைக்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் எதிர்காலத்தில் அதனை எவ்வாறு ஒழுங்குமுறைப்படுத்துவது என்பன தொடர்பில் ஆராயப்பட்டன.

மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடபிராந்திய பணிப்பாளர் தலைமையிலான குழுவினரால் சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன. இதன்போது, பூர்வாங்க திட்டமிடல் அனுமதிக்கு தேசிய ரீதியாக ஓர் ஏற்பாடு உள்ளபோதும் வடக்கு மாகாணத்தில் பிறிதொரு நடைமுறை பின்பற்றப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதனை தேசிய ரீதியில் பின்பற்றப்படும் நடைமுறையை எதிர்காலத்தில் பின்பற்றுவதற்கு தயாராகவுள்ளதாக, நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் பதிலளிக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களின் தீர்மானங்களுக்கு அமைவாகவே உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறு தவிசாளர்களால் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் மாவட்டச் செயலர்களுடன் கலந்துரையாடுவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles