காணாமல் ஆக்கப்பட்ட ஒருமகன் மீண்டும் கிடைத்ததைப் போன்றுதான் வடமாகாணம் எமக்குக் கிடைத்துள்ளது. அதனை நாங்கள் அன்போடு பாதுகாப்போம் – என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
” வடக்கை வளப்படுத்த எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். பலாலி விமானநிலையத்தை விருத்தி செய்வோம். அங்கு கொழும்பில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
கைத்தொழில் பேட்டைகள் உருவாக்குவோம். அதன் பிறகு, ‘கனடாவுக்குச் சென்று பனியில் துன்பப்படும்நிலை மாறிவிட்டது” என்று உங்களது உறவுகளுக்கு சொல்லுங்கள்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நான்கு மாதத்தில் ஓர் அப்பக்கடையைப் போடுவதே கடினம். ஆனால், நாங்கள் ஆனையிறவு உப்பு உற்பத்தியை ஆரம்பித்துள்ளோம். அதனைத் தொடங்கிய பின்னர் சுமந்திரனுக்கு அது பிரச்சினையாக உள்ளது.
உப்பு பக்கற்றில் பெயர் பிழையாம். உப்பிலே நீங்கள் பாப்பது பெயரையா? ருசியையா? இவ்வாறான சின்ன விடயங்களுக்காக இனவாதத்தை தூண்டும் ராஜபக்ச சகோதரர்கள் வடக்கிலும் உள்ளனர்.” எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
அதேவேளை, பெயர்மாற்றம் தொடர்பில் வெளிவந்த தொடர்ச்சியான எதிர்ப்புக்களைத் தொடர்ந்து, ‘ரஜ உப்பு’ என்று கடந்த அரசாங்கமே பெயர்மாற்றம் செய்தது என்றும், விரைவில் அந்தப் பெயர் ஆனையிறவு உப்பு என்று முன்னைய பெயருக்கே மாற்றம் செய்யப்படும் என்றும் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.