வரலாற்று வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் அணி

கொல்கத்தாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் மோதின.

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. டிஇதையடுத்து, கொல்கத்தா தொடக்க வீரர்களாக பில் சால்ட், சுனில் நரைன் களமிறங்கினர்.

இருவரும் பஞ்சாப் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர். நரைன் 71 ரன்களில் அவுட் ஆனார். சால்ட் 75 ரன்களில் அவுட் ஆனார். அடுத்துவந்த வெங்கடேஷ் 39 ரன்களிலும், ரசல் 24 ரன்களிலும், கேப்டன் ஷ்ரேயாஸ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது.

262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இரு வீரர்களும் கொல்கத்தா பந்துவீச்சை ஆரம்பம் முதலே துவம்சம் செய்தனர்.

இரு வீரர்களும் அரைசதம் கடந்தனர். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்துவந்த ரோசவ் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷசாந்த் சிங் உடன் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரு வீரர்களும் கொல்கத்தா பந்து வீச்சை சிதறடித்தனர்.பேர்ஸ்டோ சதம் விளாசினார். ஷசாந்த் அரைசதம் விளாசினார். இறுதியில் பஞ்சாப் 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 262 ரன்கள் குவித்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் வரலாற்று வெற்றிபெற்றது.

ஐ.பி.எல். மட்டுமின்றி டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி சேஸ் செய்த அதிகபட்ச ரன்கள் என்ற வரலாற்று சாதனையை பஞ்சாப் படைத்துள்ளது. பஞ்சாப் அணியின் பேர்ஸ்டோ 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் உள்பட 108 ரன்களுடனும், ஷசாந்த் சிங் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் உள்பட 68 ரன்களுடன் களத்தில் இருந்து வரலாற்று வெற்றிக்கு வழிவகுத்தனர்.

 

Related Articles

Latest Articles