அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கூடுதல் வரிவிதிப்பை நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ட்ரம்ப் அரசு மேல்முறையீடு செய்ய அக்டோபர் 14-ம் திகதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரிவிதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடை பிடிக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
கனடா, மெக்சிகோ உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடும் இறக்குமதி வரிகளை விதித்துள்ளார்.
தனது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சீனா மீதான வரியை ட்ரம்ப் பல மடங்கு உயர்த்தினார். பின்னர், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வரி விகிதத்தை குறைத்தார்.
அதேபோல இந்தியாவுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால், இந்தியாவில் தொழில்துறைகடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
அமெரிக்காவிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளால், இறக்குமதி பாதிக்கப்படும். உள்நாட்டில் பொருட்களின் விலை உயரும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அமெரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ட்ரம்பின் வரிவிதிப்பு முடிவுகளுக்கு எதிராக, நியூயார்க் வர்த்தக நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
இந்நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் இதில் நேற்று முன்தினம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கு எதிராகவும் ஜனாதிபதி ட்ரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார். இதை நியாயப்படுத்தவே, தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் பெரும்பாலான வரிவிதிப்புகள் சட்டவிரோதமானவை. எனவே, கூடுதல் வரிவிதிப்பை நீக்க வேண்டும்.
அடிப்படையில், வரிவிதிப்பு என்பது அமெரிக்க காங்கிரஸின் அதிகாரத்துக்கு உட்பட்டது. வரிவிதிப்பில் ஜனாதிபதிக்கு சில அதிகாரங்களை மட்டுமே நாடாளுமன்றம் வழங்கியுள்ளது.
வரம்பற்ற அதிகாரத்தை அதிபருக்கு காங்கிரஸ் வழங்கவில்லை. அத்தகைய நோக்கத்தை காங்கிரஸ் கொண்டிருக்கவில்லை. இதை நினைவில் கொள்ள வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், நியூயார்க் வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை, கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏறக்குறைய உறுதிசெய் துள்ளது. இது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதேநேரம், ட்ரம்ப் அரசு இதில் மேல்முறையீடு செய்ய அக்டோபர் 14-ம் திகதிவரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்துமானால், கூடுதல் வரிவிதிப்பு மூலம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தர வேண்டிய நிலை அமெரிக்க அரசுக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அரசின் வரிவிதிப்பு நடவடிக்கை சட்ட விரோதம் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அனைத்து வரிவிதிப்புகளும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. இந்த வரிகள் நீக்கப்பட்டால், அது நாட்டுக்கு ஒரு முழுமையான பேரழிவாக இருக்கும். இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுமானால், அது அமெரிக்க நாட்டையே அழித்துவிடும்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். நீதிமன்றத்தில் இந்த சவாலை எதிர்கொள்வோம். அந்த சவாலில் அமெரிக்கா வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.