தொழிலாளர் தேசிய சங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள், அதன் தலைவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் இதுவரை இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்றும் அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், முன்னாள் எம்.பி. திலகராஜ், தொழிலாளர் தேசிய சங்கத்தில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்படுவதற்கு, சங்கத்திற்குள் பல முன்னணி உறுப்பினர்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் இதற்கு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும், திலகர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டால் தாம் வெளியேற நேரிடும் என்றும் தலைவருக்கு தகவல் அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும், மயில்வாகனம் திலகராஜ், கடந்த பொதுத் தேர்தலின் பின்னர், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மூலம் கிடைக்கும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்பில் இருந்தார்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்த மயில்வாகனம் திலகராஜ், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுத் தரவில்லை என்பதில் அதிருப்தியில் இருந்தார்.
கடந்த காலங்களில் தொழிலாளர் தேசிய சங்கத்தை வெளியே இருந்து கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், மாற்று அணியொன்றை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொள்வதற்கு, தொழிலாளர் சங்கத்தின் தலைவருக்கு தூது அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகிறது.
