கண்டியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் சுமார் 28 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடிய குற்றச்சாட்டில் வீட்டுப் பணிப்பெண், அவரது மகன் மற்றும் மருமகன் உள்ளிட்ட 7 பேரை கண்டி பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 58 வயதுடைய பணிப்பெண் கலஹா பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கண்டி வித்யார்த்த மாவத்தையில் உள்ள மூக்குக் கண்ணாடி வர்த்தகரின் வீட்டில் சுமார் ஏழு வருடங்களாக பணியாற்றி வந்தவர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, சுகயீனமுற்ற குறித்த வர்த்தகர், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதுடன் சந்தேக நபர் வீட்டில் தங்கி தனது வேலைகளை செய்து வந்துள்ளார்.
சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் தங்க நகைகள், மோதிரங்கள், காதணிகள் மற்றும் வளையல்களை திருடி தனது மகனையும் மருமகனையும் வர்த்தகரின் வீட்டிற்கு அழைத்து வந்து விற்பனைக்கு கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி சந்தேக பெண் சுமார் 28 பவுண் தங்கத்தை திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், கலஹா மற்றும் ஹேவாஹெட்ட ரஹதுங்கொட பிரதேசத்தில் தங்கப் ஆபரணங்கள் செய்யும் மூன்று இடங்களில் சுமார் ஆறு பவுண் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இவர்களிடம் தங்க பொருட்களை வாங்கிய இரு தம்பதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தங்கப் ஆபரணங்கள் செய்யும் வேலைத்தலங்கள் அனுமதியின்றி நடத்தபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குற்றப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜேரத்ன, தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர் .
