பெறுமதி சேர் வரி (VAT) உள்வாங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி உரிய வரி மாற்றங்களைச் செய்து VAT திருத்தத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்தார்.
“பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டம் மற்றும் அதன் தாக்கம்” என்ற தலைப்பில் நேற்று (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதாரம் தொடர்பான விசேட அறிவுள்ள ஒரு சிலர் கூட ஜனவரி முதலாம் திகதி முதல் VAT அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் ஒரு குடும்பத்தின் மாதாந்தச் செலவு மேலும் 40,000 ரூபாவினால் அதிகரிக்கும் என்ற கருத்தை கூட சமூகமயப்படுத்துவதாகவும், ஆனால் அந்த கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
மேலும், கல்விச் சேவைகள், மின்சாரம், சுகாதாரம், மருத்துவம், பயணிகள் போக்குவரத்து, அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட ஏறக்குறைய 90 வகையான பொருட்களுக்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், சிறப்பு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ள 65 வகையான பொருட்களுக்கு VAT விதிக்கப்படாது என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் ஏ. எம். நபீர், ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் எம். ஜே. குணசிறி மற்றும் பணிப்பாளர் கே. கே. ஐ. எரந்த, இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜனக எதிரிசிங்க ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா,
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் VAT விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 20 வருடங்கள் கடந்துள்ளன. ஆரம்ப கட்டத்தில், VAT இரண்டு விகிதங்களாக இருந்தது, ஆனால் பின்னர் அது மூன்று விகிதங்களாக திருத்தப்பட்டன. இவ்வகையில், அவ்வப்போது வெவ்வேறு மதிப்புகளில் இருந்த இந்த VAT வரி விகிதம், 2019 இல் செய்யப்பட்ட வரித் திருத்தங்களால் 8% ஆகக் குறைக்கப்பட்டது. இதனால் அரச வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. பின்னர் அது 15% ஆக உயர்த்தப்பட்டது.
கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட VAT வரி திருத்தச் சட்டம் மூலம், 2024 ஜனவரி 01 முதல் VAT விகிதத்தை 15% இலிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனிமேலும் எம்மால் சலுகைகளை அடிப்படையாக கொண்டு முன்னோக்கிச் செல்வது கடினம். அரச வருமானத்தை அதிகரிக்கும் அத்தியாவசியமான காரணத்தினால் இந்த வரித் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதைக் கூற வேண்டும். இதற்குத் தேவையான பல்வேறு வரித் திருத்தங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டாகும்போது VAT வரிக்காக பதிவு செய்யப்படும் எல்லை 15 மில்லியனாக காணப்பட்டது. ஆனால் 2020 ஜனவரி 01 முதல் அந்த எல்லை 300 மில்லியனாக உயர்த்தப்பட்டது. அதன் மூலம் வற் வரிக்கு பதிவு செய்யப்பட்டிருந்த ஏராளமான வரிக் கோப்புகள் செயலிழந்தன. ஆனால் பின்னர் அது 80 மில்லியனாகக் குறைக்கப்பட்டது. புதிய திருத்தத்தின்படி 2024 ஜனவரி 01 முதல் 60 மில்லியன் ரூபாவாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏராளமான வரி விலக்குகளை நீக்க புதிய திருத்தத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் இழந்த பெரும் வருமானத்தை மீட்பதே இதன் நோக்கமாகும்.
ஆனால் சிலர் இந்த நடவடிக்கை குறித்து தவறான கருத்துக்களை சமூகமயமாக்கி வருகின்றனர். ஜனவரி 01 ஆம் திகதி முதல் வாழ்வது கடினம் என்றும், வரி திருத்தத்தால் ஒரு குடும்பம் பெரும் செலவைச் சுமக்க நேரிடும் என்றும் சிலர் கூறுகின்றனர். வரி திருத்தம் காரணமாக சில மேலதிக செலவுகள் ஏற்படும் என்றாலும், சிலர் கூறும் அளவுக்கு அது அதிகமானதாக இருக்க மாட்டாது என்பதையும் தெரிவிக்க வேண்டும். மேலும், பெறுமதி சேர் வரி உள்வாங்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி, உரிய வரி திருத்தங்களை செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே எடுத்து வருகிறது.
எடுத்துக்காட்டாக, சில பொருட்களை இறக்குமதி செய்யும் போது துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி விதிக்கப்படும். வற் வரி அதிகரிப்பின் தாக்கத்தை குறைக்க அந்தப் பொருட்களில் இருந்து துறைமுகம் மற்றும் விமான நிலைய வரியை நீக்கி வற் வரியை மாத்திரம் விதிப்பது போன்ற சாதகமான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட உள்ளன.
