ஹட்டன் பகுதியில் பிரதான வீதிகளில் ஒன்றான ஹட்டன் போடைஸ் ஊடான டயகம வீதி பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வீதி இவ்வாறு சேதமடைந்து காணப்படுவதால் உயிரை கையில் பிடித்து கொண்டே வாகனங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என சாரதிகள் தெரிவித்தனர்.
குறித்த வீதி ஊடாக 12 தனியார் பஸ்களும், 03 இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. வீதியில் பல இடங்களில் பாரிய குழிகள் தோன்றி மழை காலங்களில் தடாகங்கள் போல் காட்சியளிப்பதாகவும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
டிக்கோயா தொடக்கம் மன்றாசிவரை உள்ள பகுதியில் பல இடங்களில் வீதி உடைந்த காணப்படுவதனால் வாகனங்கள் செல்வதற்கு நீண்ட நேரம் எடுப்பதாகவும் இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள்,அரச ஊழியர்கள் வைத்தியசாலை செல்லும் நோயாளர்கள் உட்பட பலரும் பாதிக்கப்படுவதாகவும்
தெரிவிக்கின்றனர்.
வீதி மோசமான நிலையில் இருந்ததன் காரணமாக பல தடைவைகள் பஸ்கள் விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்த நிலையில் வீதி அபிவிருத்தி செய்வதற்கு அகலப்படுத்திய போதிலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கைவிடப்பட்டன. தற்போது குறித்த வீதி இருந்ததை விட மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
மலையக அரசியல் தலைவர்களிடம் பல தடைவைகள் முறையிட்ட போதிலும் உடன் புனரமைப்பதற்கு நடடிவடிக்கை எடுப்பதாக பொய் கூறி வருவதாகவும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியின் ஊடாகவே அவசரமாக நோய்வாய் படும் நபர்களை டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டியிருப்பதாகவும் வீதி மிகவும் மோசமான நிலையில் இருப்பதனால் இடையிலே இறக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பலரும் தெரிவிக்கின்றனர்.
வீதியில் உள்ள குழிகள் காரணமாக கிளினிக் செல்லும் கர்பினித்தாய்மார்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் வேறு வழியின்றி தொடர்;ந்து ஆபத்தான நிலையில் பயணிப்பதாகவும் பலர் கூறுகின்றனர்.
வீதி உடைந்து காணப்படுவதனால் நாளாந்தம் பல விபத்துக்களை சந்திப்பதாகவும் மழை நேரங்களில் நீர் வீதியில் வழிந்து ஓடுவதனால் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வீதியினை பயன்படுத்துபவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதாகவும் இதனால் அவசரத்திற்கு கூட வாகன சாரதிகள் வர மறுப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறான போதிலும் இன்மொரு உயிர் பிரிவதற்கு முன் வீதியினை புனரமைத்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்