வலுவான நிலையில் இலங்கை – இந்திய பௌத்த உறவு!

உலகில் தேரவாத பௌத்தத்தை பின்பற்றும் நாடுகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றது இலங்கை. நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் 70 வீதமானோர் பௌத்த மதத்தையே பின்பற்றி வருகின்றனர். அரச மதமாக பௌத்தமே விளங்குகின்றது. அரசமைப்பிலும் அதற்கு முன்னுரிமையும், முதலிடமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கையில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பௌத்த மதம், அண்டை நாடான இந்தியாவில் இருந்துதான் இலங்கைக்கு வந்தது. ஆக இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, கலை, கலாசார உறவுகளையும் தாண்டி பல நூற்றாண்டுகளாக பௌத்த உறவும் நீடிக்கின்றது.

இலங்கையில் போலவே இந்தியாவிலும் பல்லின மக்கள் வாழ்கின்றனர். பல மதங்கள் உள்ளன. அந்நாட்டில் இந்துக்கள் அதிகம் வாழுகின்றபோதிலும் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்களும் உள்ளனர். தமிழ் பௌத்தர்கள்கூட இன்றளவில் வாழ்கின்றனர். எல்லா வழிகளிலும் இலங்கைக்கு நேசக்கரம் நீட்டும் இந்தியா, பௌத்த மத மேம்பாட்டுக்காகவும் இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கிவருகின்றது. உதாரணமாக இருநாடுகளுக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு ஒரு கோடியே 50 இலட்சம் டொலர்களை 2020 இல் இந்தியா நன்கொடையாக வழங்கியிருந்தது.

இலங்கையில் பௌத்தத்தின் தோற்றம்

இந்தியாவை ஒன்றிணைத்து ஒரு குடையின்கீழ் அறவழியில் ஆண்ட மன்னர்தான் அசோகர். புத்த பெருமானின் அறநெறிகளில் மனத்தை பறிகொடுத்த அசோகர் காலபோக்கில் பௌத்த சமயத்தை தழுவினார். அதன்பின்னர் இந்தியாவிலும், சூழவுள்ள தேசங்களிலும் பௌத்த மதத்தை பரப்பும் நடவடிக்கையில் இறங்கினார். இதற்காக ஒவ்வொரு நாடுகளுக்கும் பௌத்த துறவிகளையும், தூதுவர்களையும் அனுப்பினார். அவ்வாறு அனுப்பட்டவர்களில் அசோக மன்னரின் மகனாகிய மகிந்தரும் ஒருவர். அவரே மன்னரின் பிரதிநிதியாக இலங்கைக்கு வந்து, பௌத்த மதத்தை பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்கு இலங்கையிலும் முழு ஆதரவு வழங்கப்பட்டது. சில மன்னர்கள் பௌத்த தர்மத்தை ஏற்றுக்கொண்டு, தொண்டுகளை ஆற்றினர். ஆக முடியாட்சி காலம் தொட்டே பௌத்த உறவு நிலவுகின்றது.

சேர, சோழ, பாண்டியர்கள் இலங்கைமீது படையெடுப்புகளை செய்திருந்தாலும் பௌத்த மதத்தை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை எனவும், பௌத்த மதத்தை காத்தனர் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சோழர்கள் காலத்தில் பௌத்த மதம் எவ்வாறு காக்கப்பட்டது என்பதை அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் உள்ள சில காட்சிகளில் காண்பிக்கப்பட்டிருந்தது. பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களுக்கு இது முழுமையாக புரிந்திருக்கும்.

இலங்கையில் பௌத்தர்களின் புனித தினமான வெசாக் மற்றும் பொசன் நிகழ்வுகளின்போது புத்தரின் புனித சின்னங்களை சிறப்பு விமானம்மூலம் டில்லி கொழும்புக்கு அனுப்பிவைக்கும். பௌத்த தேரர்கள் மற்றும் பக்தர்களின் ஆன்மீக யாத்திரைக்குகூட பல சலுகைகளை இந்தியா வழங்கிவருகின்றது. ஏன் இந்தியாவின் புதிய சர்வதேச விமான நிலையமொன்று குஷிநகரில் திறந்து வைக்கப்பட்டபோது – அது பௌத்தர்களுக்கு முக்கிய பகுதி என்பதால் இலங்கை பிக்குகளை ஏற்றிய விமானம்தான் முதலில் தரையிறங்கியது. பௌத்த உறவுக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

பிறந்த வீட்டில் இருந்து ஒரு பெண் புகுந்த வீட்டுக்குசென்றாலும், பிறந்த வீட்டார் அந்த பெண்ணை ஒருபோதும் கைவிடுவதில்லை. தேவையான எல்லா உதவிகளையும் வழங்குவார்கள். இதுதான் உண்மையான பந்தம். இது எமது கலாசாரம் மற்றும் உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். இந்தியாவில் பிறந்த பௌத்த மதம், இலங்கைக்கு வந்த பிறகும் அதற்கு தேவையான உயரிய இடத்தை இந்தியா என்றும் வழங்கி வருகின்றது. பௌத்த உறவை மிகவும் எளிமையான முறையில் எடுத்துரைக்கவே இந்த ஒப்பீடு. எனவே, எவர் மனதையும் புண்படுத்தும் வகையில் பெண் விவகாரத்துடன் மதத்தை ஒப்பிடவில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றோம்.

அதேபோல இந்திய இராஜதந்திரிகள் இலங்கைக்கு வருகைதரும்போது வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதாமாளிகைக்கு சென்று வழிபட தவறுவதில்லை.

இலங்கையில் உள்ள பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை பகைத்துக்கொண்டு – அவர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு ஆட்சியாளர்கள் எதையும் செய்வதற்கு முன்வர மாட்டார்கள். எனவே, இலங்கை தொடர்பில் இடம்பெறும் நடவடிக்கைகளைக்கூட இந்திய தரப்பு மகாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் உயரிய பண்பாகும். இலங்கை, இந்திய பௌத்த உறவின் வெளிப்படாகக்கூட இதனை நோக்கலாம்.

பூகோள மற்றும் பிராந்திய விவகாரங்களின்போது தமது நலனுக்காக ஒரு சில தரப்புகள் பௌத்த தேரர்களை பயன்படுத்திக்கொள்ளும் கசப்பான சம்பவங்களும் இலங்கையில் பதிவாகியுள்ளன. ஆனால் இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு செயற்பட்டதில்லை. இதனை பௌத்த மக்கள் இன்றளவிலும் நன்றியுடன் நினைவுகூறுகின்றனர். உன்னதமான இந்த உறவுக்கு மக்களின் மனசாட்சியைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்? பௌத்த விகாரைகளை நிர்மாணிக்கும்போது கட்டுமான உதவி, சிற்ப கலைஞர்களின் உதவி, தொழில்நுட்ப உதவி என இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த மதம் சார்ந்த உறவை நீடித்துக்கொண்டே போகலாம்.

Related Articles

Latest Articles