உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணியை ஆரம்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், வாக்குச் சீட்டு தொடர்பான முதற்கட்ட அச்சிடும் பணியை அரச அச்சகம் ஆரம்பித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான ஏனைய ஆவணங்களை அச்சடிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் ஒரு கோடியே 66 லட்சத்து 92 ஆயிரத்து 398 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
எனவே உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 20 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக காகிதச் செலவும், அச்சடிக்கும் செலவும் அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு வாக்குச் சீட்டு அச்சடிக்க அதிகச் செலவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்தத் தேர்தலின் அச்சுப் பணிகளுக்கு சுமார் 20 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று அச்சகத் தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். அச்சு வேலைகளில் காகிதம், மை போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.










