‘ வாக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ஒத்துழைக்கவும்’ – அனைத்து எம்.பிக்களிடமும் சபாநாயகர் கோரிக்கை!

உரிய சட்டவிதிகளுக்கு அமைய பாராளுமன்றத்தின் மூலம் அடுத்துவரும் ஜனாதிபதியைத் தெரிவுசெய்ய நாளை (20) நடத்தப்படும் வாக்கெடுப்பை ஜனநாயத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் அவருடைய தலைமையில் இன்று (19) நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்துவரும் ஜனாதிபதியை உரிய சட்ட விதிகளுக்கு அமையத் தேர்ந்தெடுப்பதற்கு இதுவரை அனைத்துத் தரப்பினரும் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய வாக்களிப்புத் தொடர்பான வழிகாட்டல்களை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க இருப்பதாக நாளையதினம் நடத்தப்படும் இரகசிய வாக்கெடுப்பின் போது தெரிவத்தாட்சி அலுவலராகப் பணியாற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

அதேநேரம், பாராளுமன்றத்தை மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அவசர கால நிலைமை பிரகடனத்தை அன்றையதினம் அனுமதிக்காக சமர்ப்பிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles