இந்தியாவிடமிருந்து வாராந்தம் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தை தெரிவித்தார்.
அதற்கமைய, வாராந்தம் 100 மெட்ரிக் தொன் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கூறினார்.
COVID சிகிச்சை நிலையங்களுக்கு பயன்படுத்துவதற்காகவே இந்தியாவிடமிருந்து ஒக்சிஜன் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
அடுத்த வாரம் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதுடன், தேவை பூர்த்தியாகும் வரை கொள்வனவு முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், சுகாதார ஒழுங்கு விதிகளை சட்டமாக்குவதற்கான வர்த்தமானியை எதிர்வரும் திங்கட்கிழமை (16) வௌியிடவுள்ளதாவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி ஏற்றல் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகள் தொடர்பில் தொடர்ச்சியாக பொதுமக்கள் தௌிவுபடுத்தப்பட வேண்டும் என இதன்போது ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் சுகாதார அமைச்சருக்கு அறிவித்துள்ளனர்.
		









