டி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் நமீபியாவிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த இலங்கை கட்டாய வெற்றிக்காக இன்று (18) ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொள்ளவுள்ளது.
ஆரம்ப சுற்றில் ஏ குழுவில் இருக்கும் இலங்கை தற்போது –2.750 நிகர ஓட்ட விகிதத்துடன் நான்காவது இடத்தில் காணப்படுகிறது. இந்நிலையில் இலங்கை அணி சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேற எஞ்சியுள்ள இரு ஆரம்ப சுற்றுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.
ஐக்கிய அரபு இராச்சியத்துடனான இன்றைய போட்டி முதல் ஆட்டம் நடைபெற்ற அதே கார்டினியா பார்க், கீலொங் மைதானத்தில் பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி இலங்கை அணி முதல் முறை மின்னொளியில் ஆடவுள்ளது.
இந்தப் போட்டிக்கான இலங்கை அணியில் மாற்றங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல் போட்டியில் டக் அவுட் ஆன தனுஷ்க குணதிலக்க நீக்கப்பட்டு அவருக்கு பதில் சரித் அசலங்க அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
கடந்த டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இருந்த சரித் அசலங்க அண்மைக் காலத்தில் சோபிக்கத் தவறி வருகிறார். இந்த சூழலிலேயே அவர் முதல் போட்டிக்கான பதினொருவர் அணியில் இடம்பெறவில்லை.
அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் பிரமோத் மதுஷானுக்கு பதில் இன்றைய போட்டியில் லஹிரு குமார இடம்பெற வாய்ப்பு உள்ளது. அண்மைக் காலத்தில் உபாதைக்கு உள்ளாகி இருந்த குமாரவுக்கு நமீபியாவுக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது.
நமீபியாவுக்கு எதிரான மோசமான தோல்வியால் இலங்கையின் நிகர ஓட்ட விகிதமும் மிக மோசமாக இருப்பதால் எஞ்சிய இரு போட்டிகளிலும் அதிக இடைவெளியில் வெற்றி பெறுவது அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் தீர்க்கமாக இருக்கும். இல்லாவிட்டால் அடுத்த போட்டிகளின் முடிவில் இலங்கை அணி தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
குறிப்பாக ஏ குழுவில் நமீபியா மற்றும் இலங்கை அணிகள் தமது அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றாலேயே இலங்கை அணி நிகர ஓட்ட விகித பிரச்சினை இன்றி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இன்று காலை 9.30 மணிக்கு கீலொங் மைதானத்தில் நடைபெறவுள்ள நெதர்லாந்து மற்றும் நமீபிய அணிகளுக்கு இடையிலான போட்டியும் இலங்கையின் அடுத்து சுற்று வாய்ப்பில் தீர்க்கமானதாக இருக்கும்.
