அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொகுசு வாழ்க்கைக்காக பாராளுமன்றத்தை பயன்படுத்துவதாக மக்கள் மத்தியில் ஒரு தவறான எண்ணம் காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த தவறான எண்ணத்தை நிவர்த்தி செய்வதற்காக பாராளுமன்றத்தில் சாதாரண விலையில் சாதாரண உணவை எமக்கும் வழங்குமாறு அனைத்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டு நாம் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளோம் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது தமது குடும்பத்தினரையும் கூட்டி வந்து அவர்களுக்கு பாராளுமன்றத்தில் விருந்துபசாரம் நடத்துவதாக தப்பான எண்ணம் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், மக்கள் உண்மை நிலையை தெரிந்து கொள்வதில்லை என்றும்சுட்டிக்காட்டினார். அது தொடர்பில் அவர் சபையில் நேற்று மேலும் தெரிவிக்கையில்:
பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்கள் மீது மக்களுக்கு ஆத்திரம் உள்ளது.
மக்கள் கஷ்டப்படும் போது அவர்கள் பாராளுமன்றத்தில் விருந்து போன்று உணவருந்தி சொகுசாக வாழ்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்பத்தோடு பாராளுமன்றத்திற்கு வந்து உணவருந்தி செல்வதாகவும் அவர்கள் தப்பான அபிப்பிராயத்தை கொண்டுள்ளனர். அந்த எண்ணத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் சபையில் மேலும் தெரிவித்தார்.