“விடுதலை அரசியல் என்ற போர்வையில் வடக்கிலுள்ள பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்த போலி அரசியலை தமிழ் மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்.” என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“வடக்கு மக்கள் மத்தியில் 100 வருடங்களாக விடுதலை அரசியலே இருந்தது. புலிகள் அமைப்புக்கு பின்னர், விடுதலை அரசியல் என்ற போர்வையிலேயே வடக்கில் பாரம்பரியக் கட்சிகள் தமது இருப்பை தக்கவைத்துக்கொண்டன.
எனினும், விடுதலை அரசியல் என்ற போர்வையில் மேற்படி பாரம்பரியக் கட்சிகள் முன்னெடுத்த போலி அரசியலை மக்கள் தற்போது நன்கு புரிந்துகொண்டுள்ளனர். இதனால் எமது உண்மையான கொள்கைகளை ஏற்று எம்முடன் இணைந்துவருகின்றனர்.
தேசிய மக்கள் சக்தி மட்டும்தான் வடக்கில் இருக்க வேண்டும் என நாம் கருதவில்லை. அங்குள்ள நீதியான கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயார்.
வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளும் எமக்கு பேராதரவு வழங்கிவருகின்றனர். வடக்கு இளைஞர்களுக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வடக்குக்கு கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தெற்கில் போன்று வடக்கிலும் இனவாதம் நிறுத்தப்பட வேண்டும். சமத்துவத்துக்கான கொடியே ஏந்தியே கட்சிகள் தோற்றம்பெற வேண்டும்.”- என்றார்.