” இறக்குமதி செய்யப்படுகின்ற விதை உருளைக்கிழங்கை நிறுத்திவிட்டு இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுங்கள் அதற்கான அனைத்து வசதிகளும் இலங்கையில் இருக்கின்றது. இலங்கையில் விதை உருளைக்கிழங்கை உற்பத்தி செய்வதற்கு அனைத்து வசதிகள் இருந்தும் ஏன் அதனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதில்லை என எனக்கு புரியாதிருக்கின்றது.”
இவ்வாறு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் காலநிலை அதற்கான வசதிகள் அதற்கான முழுமையான அறிவை கொண்ட விவசாயம் சார்ந்தவர்கள் இப்படி அனைத்து வசதிகளையும் வைத்துக் கொண்டு ஏன் இறக்குமதிறை அரசாங்கம் ஊக்குவிக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.
இலங்கையை பொறுத்த வரை நுவரெலியா மாவட்டத்தில் பீட்று பாம் சீத்தாஎலிய பாம் கந்தப்பளை பாம் மீப்பிலிமான பாம் போபத்தலாவ பாம் மற்றும் ஊவா மாகாணத்தில் போகாகும்புற பாம் ஆகிய 6 இடங்கள் இருக்கின்றது.
இங்கு அனைத்து வசதிகளும் தேவையான நிலப்பரப்பும் இருக்கின்றது.இதிலே எங்களுடைய நாட்டிற்கு தேவையான விதை கிழங்கை உற்பத்தி செய்யக்கூடிய காலநிலை காணப்படுகின்றது. இப்படி அனைத்து வசதிகளையும் வைத்துக் கொண்டு ஏன் கடந்த 25 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்கின்ற அரசாங்கம் இதனை இலங்கையில் உற்பத்தி செய்ய முயற்சகளை மேற்கொள்ளவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நான் நுவரெலியா பகுதியில் இருக்கின்ற விவசாயி என்ற வகையில் இந்த பாராளுமன்றத்தில் பலமுறை இது தொடர்பாக பேசி இருக்கின்றேன்.விவசாய அமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களின் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்திருக்கின்றேன்.ஆனால் இது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரையில் யாரும் முன்னெடுக்கவில்லை.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எமக்கு டொலர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் பொருட்களை இறக்குமதி செய்கின்ற நிலைமை இல்லாமல் இருக்கின்றது.குறிப்பாக விவசாயத்திற்கான பொருட்களை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் பல தடைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
இறக்குமதி செய்யப்படுகின்ற விதை உருளைக்கிழங்கு 50 கிலோவின் விலை 23000 ரூபாவாக இருக்கின்றது.ஒரு கிலோ கிழங்கு உற்பத்திக்கு 100 ரூபா செலவாகும்.அப்படியானால் அதனை 150 முதல் 175 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டும்.அது பாவனையாளரிடம் செல்கின்ற பொழுது 225 முதல் 250 ரூபாயாக இருக்கும் எனவே இதனை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்படும்.
உற்பத்தி செலவை குறைக்க வேண்டுமாக இருந்தால் விதை உருளைக்கிழங்கை நாங்கள் இலங்கையில் உற்பத்தி செய்ய வேண்டும்.அப்படி செய்தால் குறைவான விலையில் அதனை மக்களுக்கு வழங்க முடியும்.
அது மாத்திரமல்ல எங்கள் நாட்டில் இருந்து டொலர் வெளியில் செல்லாது.மேலும் தரமான உற்பத்திகளை மேற்கொன்டால் அதனை நாங்கள் ஏற்றுமதி செய்து அதன் மூலமாக அந்நிய செலவாணியையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுவரை இதற்கு எந்த ஒரு அமைச்சரும் முயற்சி செய்யாமைக்கு காரணம் அவர்கள் யாருக்கும் இது தொடர்பான பூரண அறிவு இன்மையே ஆகும்.எனவே இன்றைய விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத் கமமே இதற்கான முன்னெடுப்புகளை எடுக்க முடியும்.
ஆப்படி அவர் முயற்சி செய்வாராக இருந்தால் நாங்களும் முழுமையாக ஒத்துழைப்பை வழங்க முடியும்.இது ஒரு விவசாய நாடு என்ற வகையில் நாம் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயற்படாவிட்டால் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது.