கற்பிட்டி – நுரைச்சோலை, பூலாச்சேனை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். நுரைச்சோலை – பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த முஹம்மது சஹீர் சகி முஹம்மது எனும் 4 வயது சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என்று நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சிறுவன் பயணித்த சைக்கிளும், டிமோ பட்டா வகையைச் சேர்ந்த லொறியும் மோதிக்கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுக்கு முன்பாக தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், தனது சிறிய சைக்கிளை எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத் தளம் தள வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
