அயோத்தியில் நாளை இடம்பெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மக்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரு நாட்களாக அயோத்தி ராமர் கோவில் முழுவதும் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்த விழாவிற்காக அதிக அளவில் இயற்கையான மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குளிர்காலம் காரணமாக இந்த சிறப்பு மலர்கள் நீண்ட காலம் புத்துணர்ச்சியுடம் இருக்கும். இந்த மலர்களின் நறுமணமும், கவர்ச்சியும் கோவிலுக்கு தெய்வீகத்தின் மற்றொரு அடுக்கைக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தி மக்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். அத்துடன், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.