நமுனுகுலை, கனவரல்ல – ஈ.ஜீ.கே தோட்டத்தில் – தொழிலின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் இன்று அடக்கம் செய்யப்பட்டது. ஊர் மக்கள் அணிதிரண்டு – கண்ணீர் மலக குறித்த இளைஞருக்கு விடை கொடுத்தனர்.
நமுனுகுலை , கனவரல்ல ஈ.ஜீ.கே தோட்ட தொழிற்சாலையில் கடமையில் ஈடுபட்டு இருந்தவேளை, தொழிற்சாலை அதிகாரியின் பணிப்புரைக்கு அமைய, அவரின் வீட்டுக்கு நீர்க்குழாய் திருத்தச் சென்ற 25 வயதுடைய தமிழரசன் கணேசமூர்த்தி என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி கடந்த 9 ஆம் திகதி உயிரிழந்தார்.
இளைஞரின் சடலம் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக. 10 ம் திகதி பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வைத்திய அறிக்கையின் பிரகாரம் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததோடு அன்றைய தினம் 11 ம் திகதி உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஈ.ஜி.கே தோட்ட பகுதிக்கு உறவினர்களால் சடலம் கொண்டு செல்லப்பட்டதோடு, குறித்த இளைஞரின் மரணத்திற்கு இழப்பீடாக 90 லட்சம் ரூபா வழங்க வேண்டும் என்று. இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானினால் தோட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், குறித்த கோரிக்கையை தோட்ட நிர்வாகம் ஏற்க மறுத்ததால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய சடலம் பலவந்தமாக ஈ.ஜீ.கே தோட்ட தொழிற்சாலையில் வைக்கப்பட்டு, நீதிக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் 13 ஆம் திகதி மதியம் நமுனுகுலை பொலிஸாரினால் தொழிற்சாலை அதிகாரியும், இயந்திரம் பழுதுபார்ப்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இக்கைது நடவடிக்கையின் பின்னர், சடலம் தொழிற்சாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அத்துடன், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தாருக்கு இழப்பீடாக 40 லட்சம் ரூபா வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் நேற்று இணக்கம் தெரிவித்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இன்று மதியம் 1.45 மணியளவில் குறித்த இளைஞரின் சடலம் வீட்டில் இருந்து அடக்கம் செய்வதற்காக ஈ.ஜி.கே தோட்ட பொது மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.
– ராமு தனராஜா –
