வீட்டுத் தோட்டமொன்றில், கஞ்சாச் செடியினை வளர்த்து வந்த நபரொருவரைக் கைது செய்ததுடன், குறிப்பிட்ட கஞ்சாச் செடியையும், பள்ளக்கட்டுவைப் பொலிசார் கைப்பற்றினர்.
பள்ளக்கட்டுவை நகரின் புற நகர்ப் பகுதியிலேயே, மேற்படி சம்பவம் 09-12-2021ல் இடம்பெற்றுள்ளது.
பள்ளக்கட்டுவைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, பள்ளக்கட்டுவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வை.எம்.பி. குலரட்ன தலைமையிலான குழுவினர் 09-12-2021ல் குறிப்பிட்ட வீட்டுத் தோட்டத்தை சுற்றி வலைத்து, தேடுதல்களை மேற்கொண்டனர். அவ்வேளையில் மிகவும் சூட்சுமமான முறையில் மரக்கறி பயிர்களுடன் வளர்ந்திருந்த கஞ்சாச் செடியைக் கண்டுப் பிடித்தனர்.
இக் கஞ்சாச்செடி 11 அடி உயரத்தில் வளர்ந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இக் கஞ்சாச் செடியை பொலிசார் கைப்பற்றியதுடன், வீட்டுத்தோட்ட உரிமையாளரையும் பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை, பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக, பள்ளக்கட்டுவை பொலிசார் தெரிவித்தனர்.
எம். செல்வராஜா, பதுளை










