வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை காலவரையின்றி கட்டுப்படுத்தி, அதில் கிடைக்கும் வருவாயை தங்கள் நாட்டுக் கணக்குகளில் வரவு வைக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மியாமியில் நடந்த கோல்ட்மேன் சாக்ஸ் மாநாட்டில் அந்த நாட்டு எரிசக்தித் துறை அமைச்சா் கிறிஸ் ரைட் பேசியதாவது:
வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை முழுமையாகக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் வெனிசுலாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எண்ணெய்யை விற்பனை செய்வோம். அதன்பிறகு வெனிசுலாவில் உற்பத்தியாகும் எண்ணெய்யை அமெரிக்கா பிற நாடுகளுக்கு தொடா்ந்து ஏற்றுமதி செய்யும்.
இதனால் கிடைக்கும் வருவாய் வெனிசுலா பெயரில் அமெரிக்கக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இது வெனிசுலா மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும் என்றாா் அவா்.
இதற்கிடையே, வெனிசுலா எண்ணெய் விற்பனையை அமெரிக்கா ஏற்கனவே தொடங்கிவிட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லெவிட் தெரிவித்தாா்.
முன்னதாக, வெனிசுலா அமெரிக்காவுக்கு 3 முதல் 5 கோடி பேரல் எண்ணெய்யை வழங்கும் என்று அதிபா் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். அதன் மதிப்பு சுமாா் 280 கோடி டாலா் (சுமாா் ரூ.25,172 கோடி) ஆகும். இதில் கிடைக்கும் வருவாய் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என்று டிரம்ப் கூறினாா்.
இருந்தாலும், வெனிசுலா இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் இதற்கு ஒப்புக்கொண்டாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடா்பாக எந்த அறிக்கையையும் அவா் வெளியிடவில்லை.
இந்த நிலையிலும், வெனிசுலா எண்ணெய் துறையை அமெரிக்க நிறுவனங்கள் மறுகட்டமைப்பு செய்யும் என்று டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது. செவ்ரான், கானோகோபிலிப்ஸ், எக்ஸான் போன்ற நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஆலோசிப்பதற்காக எரிசக்தி நிறுவனத் தலைவா்களை டிரம்ப் வெள்ளிக்கிழமை சந்திப்பாா் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
