தோட்ட தொழிலில் இருந்து இடைவிலகி வெளிநாடுகளுக்கு தொழில் பெற்று செல்லும் மலையகத்தவர்கள் மீண்டும் நாடு திரும்பியவுடன் அவர்கள் அதே தொழிலில் ஈடுபட சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (10) இடம் பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
பணியில் இருந்து இடைவிலகி வெளிநாடு செல்லும் மலையகத்தவர்கள் இரண்டு வருடங்களின் பின் மீண்டும் பணியில் இணைத்தால் அவர்களின் சேவை காலத்தில் முறிவில்லாமல் தொடர்ந்தும் வேவையாற்றியதாக கருதி அவர்கள் ஓய்வு பெறும் போது தொடர்ச்சியான ஓய்வூதியத்தை சட்டப்படி வழங்க வேண்டும் என்பதற்காகவே அவர்களின் சேவைக்காலம் முடியுற்றதாக நிர்வாகம் அறிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மீண்டும் வேலை வழங்கப்பட்டால் அவர்கள் புதிதாக பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களாகவே கருதப்பட்டு அதற்கமையவே வேவைக்கால கொடுப்பனவுகள் கணக்கிடப்படும் எனவும் இதனால் தோட்ட நிர்வாகங்கள் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் பெரும் நன்மை அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான வஞ்சக செயற்பாட்டினால் வெளிநாட்டில் வேலை செய்து நாடு திரும்பும் தொழிலாளர்கள் பல்லாயிர கணக்கணக்கான ரூபாய்களை இழப்பதாகவும், ஓய்வூதியத்தை செலுத்த வேண்டி ஏற்படும் என்பதனாலேயே தோட்ட நிர்வாகங்கள் அவர்களை மீண்டும் பணிகளில் இணைத்துக்கொள்வதில்லை எனவும் கூறினார்.
மேலும் வெளிநாடுகளில் பணிப்புரியும் தொழிலாளர்கள் சிறு குற்றத்திற்காகவும் கடுமையாக தண்டிக்கப்படுவதாக தெரிவித்த அவர்; சில வேளைகளில் கொலைச் செய்யப்படும் நிலைமை உள்ளதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறு அவர்கள் கொலைச் செய்யப்பட்டாலும் வெறுமனே தற்கொலை என கூறி சம்பந்தப்பட்ட நாடுகள் தப்பித்து விடுவதாகவும், ஆகவே இந்த விடயத்தில் அந்தந்த நாடுகளில் இயங்கும் இலங்கை தூதரகங்கள் அக்கறையுடம் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் தற்போதைய கொவிட் 19 அச்சுறுத்தலால் வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ள ஆயிரக்கணக்கான இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடு சென்றுள்ளவர்கள் பல சுகபோகங்களோடு வாழ்வதாக இங்குள்ளவர்கள் நினைத்தாலும்அவர்கள் அங்கு பல்வேறு இன்னல்களை அனுபவிப்பதாக அரவிந்தகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.