மலையகத்தில் தேயிலை காணிகளுக்கு அரச பலத்துடன் அச்சுறுத்தல் இருந்த போதெல்லாம் அதை மக்கள் பலத்துடன் தடுத்து நிறுத்திய வரலாறு இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு உண்டு என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து மலையக மக்களுக்கும் மலையக மண்ணுக்கும் காவலராக இருந்து காப்பாற்றி வருகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸை கொச்சைப்படுத்த மலையகத்தின் வரலாறு தெரியாத கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாருக்கு அருகதை கிடையாது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்ற நாற்காலிகளும் பிடிப்பதற்காக அரசியலுக்கு வந்த அமைப்பல்ல என்பது திடீர் அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
கண்டி நாகஸ்தன்ன தோட்டத்தில் 700 ஏக்கர் தேயிலை காணியை அரசாங்கம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யவிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் முன்வைத்த குற்றச்சாட்டை உரிய அரச நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் அதை முற்றாக மறுத்துள்ளனர்.
பெருந்தோட்ட காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதையோ,அல்லது தொழிலாளர்களை புறந்தள்ளிவிட்டு காணிகளை கைப்பற்றும் முயற்சியை எவர் மேற்கொண்டாலும் அதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றுமே ஏற்றுக்கொண்டது கிடையாது.
இவ்வாறான முறையற்ற முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கு ஆளும் கட்சியிலா அல்லது எதிர்க் கட்சியிலா இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் மலையக சமூகத்தின் இருப்பை காக்கின்ற தார்மீக பொறுப்பை ஏற்று இருக்கிறோம். அதற்காக எந்த சூழ்நிலையிலும் எவரையும் எதிர்ப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின் நின்றது கிடையாது.
1975 காலப்பகுதியில் தலவாக்கலை டேவன் தோட்ட பகுதியில் அரசாங்கம் பெருந்தோட்ட காணிகளை பறித்தெடுக்க முற்பட்டபோது எவ்விதமான அரசியல் அந்தஸ்தும் இல்லாத நிலையிலும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் அந்த முயற்சியை தடுத்து நிறுத்தியது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ். அந்தப் போராட்டத்தில் தான் சிவனு லட்சுமணன் மலையக மண்ணுக்காக தன் உயிரைக் கொடுத்தார்.
அவ்வாறான பல போராட்டங்களை நடத்தி மலையக மண்ணை தக்க வைத்திருக்கிறது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இவ்வாறான வரலாற்று தியாகங்களை புரிந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸை தரகுப் பணத்துக்காக விலை போகின்றது என்ற தரமற்ற குற்றச்சாட்டை சுமத்தமுற்படுவதன் மூலம் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தனது இயலாமையையே வெளிக் காட்டுகின்றார்
இலங்கை தொழிலாளர் காங்கிரசோ அல்லது ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானோ தரகுப் பணத்திற்காக தோட்டத்தொழிலாளர்களை காட்டிக்கொடுக்கும் பரம்பரையைச் சார்ந்தவர்கள் அல்ல. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரை மேடையில் வைத்துக்கொண்டே தோட்டக் காணிகளை பங்கு போட்டுக்கொண்ட அமைச்சர்கள், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நன்கு அறிவார்.
இந்த விடயத்தைக் கூட இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் தடுத்து நிறுத்த பல மட்டங்களில் முயற்சிகளை மேற்கொண்டார். அதேபோல தற்போதைய அரசாங்கத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அங்கம் வகித்த போதும் தோட்டத் தொழிலாளர்களின் தேயிலை காணிகளை பறித்தெடுக்க அரசாங்க பலத்துடன் எவராவது முற்படுவார்களானால் நிச்சயமாக அதையும் தடுத்து நிறுத்துவோம்.
அதேபோல நாகத் தன்ன தோட்டத்தில் தொழிலாளர்களை அச்சுறுத்தி அவர்கள் பயன்படுத்திய காணிகளை பிடுங்கி எடுத்து தனியாருக்கு வழங்க அரசாங்கம் முயற்சி எடுக்கிறது என்ற குற்றச்சாட்டை அதற்குப் பொறுப்பான அரசு நிறுவனம் எழுத்து மூலமாக மறுத்திருக்கிறது. ஒருவேளை வேலு குமார் குற்றம் சாட்டுவது போல அரசாங்கத்தினால் திரைமறைவில் அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு வேலுகுமார்க்கு இருக்கிறது. கண்டி மாவட்ட மக்கள் இரண்டு முறை அவர் மேல் நம்பிக்கை வைத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் .
கண்டி மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களுக்கும், அவர்களுடைய காணிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டியது வேலு குமாரின் கடமையாகும். இதற்காக அவர் எந்த ஒரு தியாகத்தையும் செய்ய முன்வர வேண்டும். அதை விடுத்து அறிக்கை மூலம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை குற்றம் சாட்டி விட்டு ஒதுங்கி இருப்பது நாக ஸ்தன மக்களுக்கும்,அவரை நம்பி வாக்களித்த கண்டி மாவட்ட தமிழக மக்களுக்கும் செய்கின்ற மிகப் பெரும் துரோகமாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் அணியை சார்ந்த ஆறு பேர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர். அதேபோல ஐக்கிய மக்கள் சக்தி என்ற எதிர்க்கட்சியின் பலத்தையும் வைத்துக்கொண்டு இந்த விடயத்துக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மீது விரல் நீட்டுவது நகைப்புக்குரிய விடயமல்லவா? கடந்த காலத்திலும் , எதிர்வரும் காலங்களிலும் கண்டி மாவட்டத்தில் காணிகள் அபகரிக்கப்பட்டால் அந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதைத் தடுத்து நிறுத்தவேண்டிய அதிகாரமும், பொறுப்பும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரிடமே இருக்கிறது.
கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்தினால் தமது பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டவர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மக்களுக்கான பொறுப்புக்கூறலை அவர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். தனது பாராளுமன்ற பதவியை பணயம் வைத்தாவது கண்டி மாவட்ட தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டியது வேலு குமார் அவர்களின் கடமையாகும். எதிர்காலத்தில் கண்டி மாவட்ட தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப் படுவதை பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தடுத்து நிறுத்தாவிட்டால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அவருக்கு எதிரான மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும். எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்