ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து குறுகிய மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று (07) திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதேவேளை, ஹட்டன் நோக்கி வருகை தந்த பேருந்துகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் அதிகார சபையின் திடீர் சுற்றிவளைப்புப் பிரிவு அதிகாரிகளால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் வழங்கப்பட்ட நடத்துநர் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இன்றி சேவையில் ஈடுபட்ட பேருந்துகள் அடையாளம் காணப்பட்டன.
அத்துடன், பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் அதிகார சபையின் பயண நேர அட்டவணை இன்றி இயக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் பயணிகளுக்குப் பயணச்சீட்டு வழங்காமல் சேவையில் ஈடுபட்ட பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறான குறைபாடுகளைக் கொண்டிருந்த பல பேருந்துகளுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டதாக, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் திடீர் சுற்றிவளைப்புப் பிரிவின் பிரதம பரிசோதகர் சரத் சந்தன பண்டார விஜேசிங்க தெரிவித்தார்.
மேலும், பேருந்துகளின் டயர்களின் நிலைமை மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த மேலதிக உதிரிப்பாகங்கள் தொடர்பிலும் அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த உதிரிப்பாகங்களை அகற்றுமாறும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
தீபாவளிப் பண்டிகைக் காலம் நிறைவடையும் வரை இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் பிரதம பரிசோதகர் சரத் சந்தன பண்டார விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.










