இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் சின்வார் கொல்லப்பட்டார். மேற்குலக நாட்டுத் தலைவர்கள் இது போரில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றம் என்றும் போர் விரைவில் முடியும் எனக் குறிப்பிடுகிறார்.
அதேநேரம் மறுபுறம் சின்வார் கொலைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம் என ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.
ஹமாஸ் தலைவர் சின்வார் கொலையால் இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு வலுப்படும் என்று ஈரான் கூறியுள்ளது. மறுபுறம் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிரான தனது போரைத் தீவிரப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அங்கு மோதல் மீண்டும் தீவிரமடையலாம் என்றே அஞ்சப்படுகிறது.
இஸ்ரேலும் கூட பணைய கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போர் தொடரும் என்றே அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில்,
“இன்று நாங்கள் எங்கள் கணக்கைத் தீர்த்துவிட்டோம். இன்று ஒரு மிகப் பெரிய தீமையை அழித்துள்ளோம். ஆனால், எங்கள் பணி இன்னும் முடிக்கப்படவில்லை. பணய கைதிகளின் குடும்பங்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.. இது போரின் முக்கியமான தருணம். உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவரும் வீட்டிற்கு வரும் வரை எங்கள் போர் தொடரும்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இரு தரப்பும் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் மோதல் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
குறிப்பாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் ஏற்பட்டால் அது நிச்சயம் மோசமான விளைவுகளை ஏற்படும். ஈரான் வசம் அணுசக்தி நிலையங்கள் உள்ள நிலையில், அதில் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் உலகப் போர் கூட வெடிக்கும் என்று அஞ்சப்படுகிறது.










