ஹிட்லர் அவதாரம் எடுக்கும் ரணில்?

ரணில் விக்ரமசிங்க ஹிட்லராக செயற்படுகிறார், ஜனநாயகத்தை மீறுகிறார், தேர்தலை ஒத்திவைக்கிறார் என்று பல விமர்சனக் கணைகளை எதிர்க்கட்சியினர் தொடுத்துவருகின்றனர். ஆனால் ரணில் விக்ரமசிங்க தான் வகுத்துள்ள திட்டத்தை கனக்கச்சிதமாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறார், இதற்காக அவர் ஹிட்லர் அவதாரம் எடுத்தாலும் பரவாயில்லை என்று ரணில்வாதிகள் வாதிடுகின்றனர். உண்மையில் ஹிட்லர் அவதாரம் எடுக்கிறாரா ரணில்? என்ன நடக்கிறது அரசியலில்? என்ற கேள்விகள் சாதாரண பொதுமக்களுக்கு இருக்கிறது.

2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவிற்கு மக்கள் 69 லட்சம் வாக்குகளைக் கொடுத்து ஜனாதிபதியாக பதவியமர்த்தினார்கள். ஆனால் அந்தப் பதவியில் உள்ள அதிகாரத்தையும், அதனை பயன்படுத்தும் விதத்தையும் துளியளவும் கோட்டாபய ராஜபக்ச அறிந்திருக்கவில்லை. அதன் விளைவு, மக்களாலே அவர் அந்தப் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். ஆட்சிப் பொறுப்பை ஏற்க சஜித் பிரேமதாசவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை அவர் மறுத்துவிட்டார். அதன்பின்னர் ரணில் விக்ரமசிங்க அரியணை ஏறினார். தனக்கான அதிகாரம் என்ன? அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பதை அறிந்த அரசியல்வாதியாக காய்களை நகர்த்தி வருகிறார்.

மார்ச் 9ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்ற அறிவிப்பு வெளியாகி, எதிர்க்கட்சிகள் பிரசாரங்களை முன்னெடுத்து வந்தன. பல வேட்பாளர்கள் லட்சங்களை வீசி, பிரசாரங்களை ஆரம்பித்திருந்தனர். ஆனால், தேர்தல் களை கட்டவில்லை. களையிழந்த தேர்தல் என்ற தலைப்பில் இதுகுறித்து கடந்தவாரம் விரிவாகப் பார்த்திருந்தோம். தேர்தல் நடக்குமா? எதிர்க்கட்சிகள் உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றுமா? என்ற கேள்விகள் தொடர்ந்துவர, ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றியிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் உரை, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரையும் திக்குமுக்காட வைத்தது. எப்பாடுபட்டாவது தேர்தலை நடத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டியிருக்க, 40 நிமிட உரையில் அனைத்தையும் போட்டுடைத்தார் ரணில் விக்ரமசிங்க.

தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவில்லை என்ற ரணில் விக்ரமசிங்கவின் வாதத்திற்கு பதில்சொல்லவோ, எதிர்வாதம் செய்யவோ சபையில் உடனடியாக எவரும் எழுந்திருக்கவில்லை, வாயடைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அனைத்தையும் சட்டரீதியாகவே நாம் செய்கிறோம், சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் நடக்கவில்லை என்று தனது சட்ட அறிவையும், அரசியலமைப்பில் உள்ள சரத்துக்களையும் பிரித்து மேய்ந்து பாடம் எடுத்தார் ரணில் விக்ரமசிங்க.

ரணில் விக்ரமசிங்க, தேர்தலை நடத்துவதற்குப் பணம் தர மறுக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்ட, தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவே இல்லை என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். நகைச்சுவை நடிகர் வடிவேல் ஒருபடத்தில் கிணற்றைக் காணோம் என்று பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட நகைச்சுவை இதன்போது ஞாபகத்துக்கு வந்துபோனது. கிணற்றைக் காணோம் என்ற பாணியில், தேர்தலே அறிவிக்கப்படவில்லை என்று தனது வாதத்தையும், அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார். இதனையடுத்து ரணில் விக்ரமசிங்க ஹிட்லரைப் போல் செயற்படுகிறார் என்ற விமர்சனங்களை கேட்கவும், பார்க்கவும் முடிந்தது.

ஆனால், தான் அரசியலுக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கே முன்னுரிமை வழங்குவதாகவும் ரணில் விக்ரமசிங்க தனது வாதத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். நாடு ஒன்று இருந்தால் மட்டுமே அரசியலமைப்பைப் பாதுகாக்க முடியும், அரசியல் செய்ய முடியும். எனவே, நாட்டை மீட்டெடுக்க முதலில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். இந்த நேரத்தில் தன்னால் தேர்தலுக்கு பணம் தர முடியாது என்று திட்டவட்டமாக பாராளுமன்றத்தில் ரணில் அறிவித்திருந்தார்.

ஹிட்லர் அவதாரம் எடுக்கும் ரணில்?

ரணில் விக்ரமசிங்க ஹிட்லராக செயல்படுகிறார் என்ற விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. அனைத்துத் துறைகளும் அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ள, பொருளாதாரம் சீர்கெட்டுள்ள, அரச சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைப் போன்ற நாட்டிற்கு ஹிட்லர் ஒருவரே தேவை என்ற வரவேற்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஹிட்லர் தனது நாட்டை உலக அரங்கில் உயர்த்துவதற்கு கடுமையான தீர்மானங்களை எடுத்தார். ஜனநாயகத்தை மதிக்கவில்லை, எதிர்ப்புக் குரல்களுக்கு இடமளிக்கவில்லை. ஆனால், கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவரும் சந்தர்ப்பத்தில், இலங்கைக்கு ஒரு ஹிட்லர் பாணியிலான ஆட்சியாளரே தேவையென்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்தது அனைவருக்கும் நினைவிருக்கும். வகுக்கும் திட்டத்தை கச்சிதமாக செய்துமுடிக்க வேண்டும், அரசியல் லாபங்களுக்காக எழுப்பப்படும் கோசங்களைப் புறந்தள்ள வேண்டும், தொழிற்சங்கங்களின் போலி கோசங்களைக் கண்டுகொள்ளக் கூடாது என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் எப்போதும் இருந்து வருகிறது. காரணம், இலங்கையில் வீழ்ந்து கிடக்கும் அரச நிர்வாகத்தையும், அரச பொறிமுறையையும் மறுசீரமைக்க தொழிற்சங்கங்கள் பெரும் தடையாகவும், முட்டுக்கட்டையாகவும் இருக்கின்றன.

போலித் தொழிற்சங்கங்கள்!

இலங்கையின் அரச நிர்வாகத்தில் கட்சி ரீதியான தொழிற்சங்கங்கள் குவிந்து கிடக்கின்றன. ரயில்வே, பெற்றோலியம், மின்சாரத்துறை, துறைமுகம், சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்த அரசியல் வேறுபாடுகளைப் பார்க்க முடியும். தங்களுக்கு சார்பான கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், கோசங்கள் அடங்கிப் போகும். தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆட்டம் அந்தந்த துறைகளில் கொடிகட்டிப் பறக்கும். ஆனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் போர் கொடிகளைத் தூக்கிக் கொண்டு வீதிகளில் நிற்கும். இப்படித்தான், கடந்த புதன்கிழமை 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டன.

ஜப்பான் இரண்டு அணுகுண்டுகளைத் தாங்கிய பின்னர், சுமார் 50 வருடங்களில் உலகம் வியக்கும் அளவிற்கு எழுந்து நின்றது. அதற்காக ஜப்பான் உழைத்தது, கடுமையாக உழைத்தது. இதில் தொழிற்சங்கங்களின் வகிபாகம் என்பது முதன்மையானது. ஜப்பானில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஜப்பானியர்கள் உழைத்தார்கள். இரவுபகலாக தொழிற்சாலைகள் இயங்கின. தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் பேசின. நிர்வாகத்தின் பக்கமிருக்கும் நியாயங்களை சீர்தூக்கிப் பார்த்து, சமரசம் செய்துகொண்டன. ஜப்பான் முன்நோக்கி நகர்வதற்கும், வளர்ந்து நிற்பதற்கும் கடுமையாக உழைத்தன. ஒருபோதும் அரச கொள்கையுடன், செயல்திட்டங்களுடன் முரண்படவில்லை. போர்க்கொடி தூக்கவில்லை. ஆனால் இலங்கையில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், தொழிற்சங்கங்கள் தமது குறுகிய அரசியலை முன்னெடுப்பதற்காக வீதிகளுக்கு வருகின்றன. அரசாங்கத்திற்கான வருமானத்தை அதிகரித்தால் மட்டுமே நாட்டை நிர்வகிக்க முடியும் என்பது வெளிப்படையான உண்மை. நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபத்தில் இயக்குமாறு ஐ.எம்.எப். ஆலோசனை சொல்கிறது. இதற்காக கடுமையான தீர்மானங்களை
ரணில் விக்ரமசிங்க எடுத்து வருகிறார். இவற்றுக்கு தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தூக்குகின்றன.

சுகாதாரத்துறை ஊழியர்களும் கடந்தவாரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். ஆனால், சுகாதாரத்துறையில் மருந்து கொள்வனவுக்காக உருவாக்கப்பட்டிருந்த கையிருப்பு கணனி கட்டமைப்பு அழிக்கப்பட்டபோது, சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் மௌனமாக இருந்தன. இந்தக் கையிருப்பு கட்டமைப்பு அழிக்கப்பட்டதால், பல கோடி ரூபா ஊழல் நடப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டன. உதாரணமாக, மருந்துகள் கையிருப்பை கணக்கிட்டு, சுகாதார துறைக்குத் தேவையான மருந்துகளைக் கொள்வனவு செய்ய முடியும். மூன்று முதல் ஆறு மாதங்களுக்குத் தேவையான கையிருப்பை அளவிட முடியும். இதனால் அவசர கொள்வனவைத் தவிர்த்துக் கொள்ள முடியும். குறைந்த அல்லது நியாயமான விலையில் முன்பதிவுகளுடன் மருந்துகளைக் கொள்வனவு செய்ய முடியும். ஆனால் சுகாதாரத்துறையின் ஊழல் கும்பலொன்று அந்த கையிருப்பு கட்டமைப்பைத் திட்டமிட்டு அழித்தது. கையிருப்பு தெரியாததால், இறுதி நேரத்தில் அவசர கொள்வனவுக்குச் செல்லலாம். நோயாளர்களுக்குத் தேவையான அவசர மருந்துக் கொள்வனவின்போது சட்டதிட்டங்கள் அவ்வளவாக இருக்காது. இதனால் அதிக விலைக்கு மருந்துகளைக் கொள்வனவு செய்ய நேரிடும்.

இதனால் கொள்ளை இலாபத்தை இந்த ஊழல்வாதிகள் சம்பாதிக்க முடியும். இந்த கையிருப்பு கட்டமைப்பு அழிக்கப்பட்டபோது, மௌனமாக இருந்த சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள், வரி அதிகரிக்கப்பட்டதற்காக வீதிகளுக்கு வருகின்றன. இலவச கல்வியின் மூலம் மருத்துவம் படித்து, பட்டம் பெற்று லட்சக்கணக்கான ஊதியத்தைப் பெறுவோர் வரி செலுத்த மறுக்கின்றனர். இதனால், வறுமையில் வாடும் மக்களை பராமரிக்கவும், பார்த்துக் கொள்ளவும் முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படுகிறது. தொழிற்சங்கங்களின் இந்த ஒரு உதாரணம் மட்டும், தொழிற்சங்கங்களின் போலிக் கோசங்களை கோடிட்டுக் காட்டுவதற்கு போதுமானதாகும். எனவேதான், இந்தத் தகிடுதத்தங்களை அறிந்துள்ள ரணில் விக்ரமசிங்க, தான் எடுத்தத் தீர்மானங் செயல்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறார். இதற்காக வகுத்தத் திட்டங்களை செயற்படுத்தி, வீழ்ந்து கிடக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப ஹிட்லர் பாணியிலான ஜனாதிபதியொருவர் தேவை என்பது காலத்தின் கட்டாயமாகும். இல்லையெனில், வீழ்ந்து கிடக்கும் நாட்டை ஒருபோதும் தூக்கி நிறுத்த முடியாது போகும்.

– Chatham Street Journal

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles