மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை நிர்வாகம் செய்யும் கண்டி மாவட்டம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த 17 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்த வேதம் இன்று வரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் 10ஆம் திகதி வழங்கப்பட வேண்டிய சம்பளம் நிர்வாகத்தினால் வழங்கப்படாமல் அரைச்சம்பளம் மாத்திரமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனால் பல்வேறு பொருளாதார சுமைகளுக்குள்ளாகி துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிறுத்த வேண்டாம்.
மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் சீரற்ற காலநிலை, ஏனைய இயற்கை சவால்களுக்கு முகம் கொடுத்து உழைத்து குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாத வருமானத்தை எதிர்பார்த்திருக்கும் பொழுது இவ்வாறான ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.
மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையானது இதுவரை காலமும் அந்த தோட்டங்களில் சேவை புரிந்த தொழிலாளர்களது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் சேவைகால பணத்தை கூட கடந்த 15 வருடங்களாக வழங்காமல் உள்ளது.
ஆனால் பாரிய அளவில் இந்தத் தோட்டங்களிலுள்ள காணிகள் வெளியாருக்கு வழங்கும் நடவடிக்கையும் தடையில்லாமல் தினந்தோறும் நடந்து வருகிறது.
இவ்வாறான ஒரு பின்புலத்தில் உழைத்தவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்க முடியாத ஒரு நிர்வாகம் தேவையா என்று தோட்ட மக்கள் கேட்கின்றனர்.
இந்த விடயத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருக்கு தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்ததையடுத்து அவர், ஜனவசம தலைவர் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் புவனக அமரசூரிய கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
அதேபோல அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பளம் கூட வழங்க முடியாமல் நிர்வாகம் சென்று கொண்டிருந்தால் அதற்கு மாற்று வழியை தொழிலாளர்களுக்கு பெற்றுத்தர வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி உள்ளோம் என்று துறை மதியுகராஜா தெரிவித்தார்.
இல்லையென்றால் தோட்டங்களை பகிர்ந்து அளித்து தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர் ஆக்குவதன் மூலம் இவ்வாறான அவலங்களை நிறுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.