10 ஆயிரம் வீட்டுத் திட்டம் 19 ஆம் திகதி ஆரம்பம் – ஏப்ரலில் காணி உரிமை!

“ இந்திய அரசின் நிதி உதவியுடன் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகள் நிர்மாணிக்கப்படும்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிபத்திரம் வழங்கும் சௌமியபூமி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (09) இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

“ மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிலையான – நிரந்தரமான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்காக இருக்கின்றது. அந்த நோக்குடனேயே நான் அமைச்சு பதவியை ஏற்றேன். இதற்காக குழுக்களும் நியமிக்கப்பட்டன. தீர்வு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன . அவற்றை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

2014 இல் இந்திய அரசால் வழங்கப்பட்ட 4 ஆயிரம் வீட்டு திட்டத்தை முழுமையாக முடிப்பதற்கு 10 வருடங்கள் எடுத்துள்ளன. இக்காலப்பகுதியில் பெருந்தோட்டப்பகுதிகளில் சனத்தொகைகூட 4 ஆயிரமாக அதிகரித்திருக்கும். இது தொடர்பில் நான் எவரையும் குறைகூறவில்லை. யதார்த்தத்தையே கூற விளைகின்றேன். அதேபோல 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 10 ஆயிரம் வீட்டு திட்டமும் கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் ஆறு வருடங்கள்வரை தாமதமானது.

எனினும், எதிர்வரும் 19 ஆம் திகதி வீட்டு திட்டம் ஆரம்பிக்கப்படும் என்ற மகிழ்ச்சியான தகவலை அறியத்தருகின்றேன். முதற்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்படும், ஆகஸ்ட் மாதத்துக்குள் இத்திட்டத்தை நிறைவுசெய்ய எதிர்பார்க்கின்றோம். 1,300 வீடுகளுக்கும் ஒரே நாளில் அடிக்கல் நாட்டப்படும். தனித்தனியே அடிக்கல் நாட்டு விழாக்களை நடத்தி மக்களை பணத்தை வீணடிக்க விரும்பவில்லை.

அதேபோல 2 மற்றும் 3 ஆம் கட்டங்களையும் அடுத்தடுத்த மாதங்களில் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம்.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 2 லட்சத்து 51 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன, சுமார் 66 ஆயிரம் வீடுகளே அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய குடும்பங்களுக்கு வீட்டுப் பிரச்சினை உள்ளன. இப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமெனில் காணி உரிமை வழங்கப்பட வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்க நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என அண்மைய ஆய்வுகள் – கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

மலையக பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டுக்காக உழைத்துள்ளனர். 1964 இல் எமது மக்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். எனவே, காணி உரிமையை நாம் பிச்சையாக கேட்கவில்லை, அது எமக்கு கிடைக்க வேண்டிய உரிமையாகும். எமது மக்கள் மானத்துடனும், மரியாதையுடனும் வாழவே விரும்புகின்றனர்.

பிரதமர் செயலக சந்திப்பு

காணி உரிமை சம்பந்தமாக பிரதமர் செயலகத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு சந்திப்பொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிகாரிகள், பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதை எதிர்க்கின்றோம் என பெருந்தோட்ட நிறுவனங்கள் குறிப்பிட்டன. காணி உரிமை வழங்கினால் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் இருக்கமாட்டார்கள் எனவும் கூறின. இப்படியான தரப்புகளை வைத்துக்கொண்டு நாட்டை எப்படி முன்னேற்றுவது? பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களை கௌரவமாக வழிநடத்தினால் அத்தொழில்துறை பாதுகாக்கப்படும். ஆனால் மக்களை மக்களாக மதிக்காமல் கம்பனிகள் செயற்படுவதால்தான் தொழிலாளர்கள் வெளியேறுகின்றனர். இதை நாம் சுட்டிக்காட்டினோம். பெருந்தோட்டத்துறை என்பது கீழ்த்தரமான தொழில் இல்லை. ஆனால் அதற்குரிய மரியாதையும், அங்கீகாரமும் வழங்கப்படாமல் இருப்பதே பிரச்சினையாகும்.

காணி உரிமை வழங்கினால் அதனை விற்பனை செய்துவிடுவார்கள் எனவும் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். விற்கின்றார்களோ இல்லையோ எமது மக்களுக்கு சேர வேண்டிய காணி உரிமை கிடைக்கப்பெற்றாக வேண்டும். அதேபோல காணி உரிமை பத்திரத்தை பெருந்தோட்ட கம்பனிகளிடம் கொடுங்கள் எனவும் கூறினர். இது வேடிக்கையான விடயமாகும்.

பெருந்தோட்டப்பகுதிகளில் 40 ஆயிரம் ஹெக்டேயர் தரிசு நிலங்களாக உள்ளன. எமது மக்களுக்கு காணி உரிமை கிடைப்பதற்கு இதில் வெறும் 10 வீதமே போகும். மாறாக நாம் தேயிலைகளை பிடிங்கச்சொல்லவில்லை.

இன்றைய கலந்துரையாடல் நல்லபடியாக முடிந்தது, ஏப்ரல் மே மாதத்தில் காணி உரிமையை வழங்குவதற்கான சௌமியபூமி வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம். தோட்டத்தில் வேலை செய்தால் மட்டுமல் அல்ல, தோட்டத்தில் பிறந்திருந்தாலே வீடு. இது விடயத்தில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.”– என்றார்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles