பலாங்கொடை தோட்டப் பகுதிகளிலுள்ள அநேகமான தோட்டக் குடியிருப்புகள் மிகவும் பழமை வாய்ந்ததாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அவற்றின் கூரைகள், சுவர்கள் பழுதடைந்து உள்ளமையால் குடியிருப்புகளில் வாழும் மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கிவருவதாக தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
வெள்ளையர்கள் தோட்டங்களை ஆட்சி செய்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த லயன் குடியிருப்புகள் நூறு வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட பழமை வாய்ந்தது என தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
பழமை வாய்ந்த இந்த லயன் குடியிருப்புகளின் கூரைகள் பழுதடைந்து சுவர்கள் வெடித்து விழும் தருவாயில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தனால் தோட்டப் பகுதியில் வாழ்கின்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மிகவும் ஆபத்தான நிலைமையிலும் வசதியற்ற நிலையிலும் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
சிறிய அறைகள் கொண்ட லயன் வீடுகளில் ஐந்து அல்லது ஆறு குடும்பங்கள் ஒன்றாக வாழ்வதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். வாழ்வதற்கு வசதியற்ற இந்த தோட்டக் குடியிருப்புகளுக்கு பதிலாக வேறு புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள தமக்கு காணி வசதி இன்மையாலும் போதிய அளவு வருமானமும் இல்லை என்பதையும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே அரசாங்கமும் தோட்ட கம்பனிகளும் இவ்விடயத்தில் ஆர்வம் காட்டவேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.