பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் தலையீட்டுடன் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டாலும் அதனை பெற்றுக்கொள்வதற்கு தினமும் பல போராட்டங்களில் ஈடுபட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
1000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் பெருந்தோட்ட நிர்வாகங்கள் விதிக்கப்படும் சட்ட திட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு தொழிலாளரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதே நிர்வாகங்களின் அறிவுறுத்தல்.
இதுவரை காலமும் கூட்டு ஒப்பந்தம் என்ற நிபந்தனைக்கு அமைய முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் கைச்சாத்திட்ட உடன்படிக்கைக்கு அமைய வே நாளாந்த சம்பளம் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய வேலைகள் மற்றும் சலுகைகள் என்பன பரிந்துரைக்கப்பட்டிருந்தன .
ஆனால் தற்போது கூட்டு ஒப்பந்தம் என்ற விடயம் காலாவதியாகிய நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு சவால்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் தினமும் முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான தலவாக்கலை தோட்ட நிர்வாகம் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை அடக்கு முறைகளுக்கு உட்படுத்தி வருவதாகவும் அதன் காரணமாக தமக்குரிய உரிமைகள் பல இல்லாத நிலையில் அடிமைகளாக நடத்தப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
இலாபத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு குறித்த தோட்ட நிர்வாகத்தின் முகாமையாளர் உட்பட நிர்வாகிகள் நடந்து கொள்வதன் காரணமாக தொழிலாளர்கள் கடும் போக்கு நடத்தப்படுவதாகவும் தெரியவருகிறது.
பெருந்தோட்ட கம்பெனிக்கு அதிக லாபத்தை காட்டும் முகமாக வெளி பிரதேசங்களில் இருந்து நாட்கூலிகளாக பலரை வேலைக்கு தினமும் அமர்த்தி வருவதாகவும் இதன் காரணமாக குறித்த தோட்டத்தில் வேலை இல்லாத நிலை இருக்கும் பலருக்கு வருமானம் இல்லாது போய் அவல நிலையில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் தற்போது தலவாக்கலை தோட்டத்தில் கட்டுக்கலை பிரிவில் ஆண் தொழிலாளர்கள் சிலருக்கு தற்காலிக பணி நிறுத்தம் ஒன்றினை தோட்ட நிர்வாகம் செய்துள்ளதாகவும் அதற்கெதிராக சம்பந்தப்பட்டவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களில் முறைப்பாடு செய்துள்ள போதிலும் அது தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்ட பிரிவில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தொழிலை செய்வதற்கு பல்வேறு அழுத்தங்களையும் கட்டளைகளையும் கடுமையாக தோட்ட நிர்வாகம் முன்னெடுத்த மீன் காரணமாகவே இப்பிரச்சனை எழுந்துள்ளது.
குறித்த ஆண் தொழிலாளர்கள் முன்பு தேயிலை செடிகளுக்கு இரசாயன பதார்த்தங்களை அளிப்பதற்காக குறித்த ஒரு நாளில் குறிப்பிட்ட மணித்தியாலங்களில் 8 ரசாயன கொள்கலன்களை பயன்படுத்தி மாத்திரமே இரசாயன பதார்த்தங்களை தேயிலை செடிகளுக்கு தெளித்தனர்.
ஆனால் தற்போது குறித்த தோட்ட முகாமையாளர் உட்பட நிர்வாகிகள் ஒரு நாளில் அடிப்படை சம்பளம் ரூபாய் 1000 பெற வேண்டுமாயின் 14 கொள்கலன்களில் உள்ள ரசாயன பதார்த்தத்தை தேயிலை செடிகளுக்கு தெளிக்கவேண்டும் அல்லது பிற்பகல் ஒரு மணி வரை இட்டு கொள்கலன்கள் இரசாயன பதார்த்தங்களை தெளித்து பின்னர் ராத்தல் ஒன்றிற்கு 40 ரூபா வீதம் பெற்றுக்கொள்ளும் வகையில் கொழுந்து பறிக்க வேண்டும் என்ற கட்டளையை தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தோட்ட நிர்வாகத்தின் இச்செயற்பாடு எதிர்ப்பு தெரிவித்து ஆண் தொழிலாளர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறினர்.
இருப்பினும் தொழிற்சங்க பிரதிநிதிகள் குறித்த தொழிலாளர்களுக்கு தாம் வளமையாக செய்த வேலையை தொடர்ச்சியாக செய்யுமாறு அறிவுறுத்திய போதிலும் அதனை தோட்ட நிர்வாகம் மறுத்து உள்ளதாக தெரிவித்தனர். இதன் காரணமாக தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக குறிப்பிட்ட சில ஆண் தொழிலாளர்களை தற்காலிக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு பிற்பகல் ஒரு மணி வரை 8 கொள்கலன்களில் உள்ள இரசாயன பதார்த்தங்களை தெளிப்பதன் ஊடாக 645 வரை மாத்திரமே சம்பள கொடுப்பனவுகளை வழங்க முடியும் என தோட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. எஞ்சிய தொகைக்கு ஏற்ப கொழுந்து பறிக்கும் வேலைகளை செய்ய வேண்டும் என்றும் தோட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான தலவாக்கலை தோட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலேயே தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அதேபோல் இப்பகுதியில் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக தரிசு நிலங்களில் விவசாய பயிர்களை பயிரிட்ட சிலரின் காணிகளும் தோட்ட நிர்வாகத்தினால் பயிர் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர்களிடமிருந்து குறித்த காணிகள் அபகரிப்பு செய்யப்பட்ட மையம் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
எனவே இத் தோட்ட மக்கள் தினமும் எதிர்நோக்கும் அடக்குமுறைகள் மற்றும் சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் தொழிற்சங்கவாதிகள் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென தோட்ட மக்கள் பகிரங்க வேண்டுகோள் ஒன்றினை விடுக்கின்றனர்.
S. கெளசல்யா










