பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் பெருந்தோட்ட பொருளாதாரம் அடிமை முறை மற்றும் பலவந்த உழைப்பு என்பவற்றில் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. காலப்போக்கில் இந்த அடிமை முறையில் தளர்வு ஏற்பட்டது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தொழில் சட்டங்கள் ஓரளவு பாதுகாக்கப்பட்டன.
தொழில் சங்கங்கள் இச்சட்டங்களை அடிப்படையாக வைத்து தொழிலாளர்களின் நாளாந்த பிரச்சினைகளை ஓரளவிற்கு தீர்த்து வைத்தன. கூட்டு ஒப்பந்தம் 2003 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்து வந்த ஒரு விடயமாகும். ஆனால் 2003 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்டத்திற்கே உரிய நடைமுறை சார்ந்த பல விடயங்களை உள்ளடக்கியுள்ள ஒரு ஒப்பந்தம் ஆகும்.
2003 ஆம் ஆண்டின் பின்னர் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தங்கள் சம்பள உயர்வை மட்டுமே கருத்தில் கொண்டாலும், 2003 இல் சேர்க்கப்பட்ட பல விடயங்கள் தொடர்ந்தும் அமுலில் கொண்டு வரப்பட்டன.
இன்று 1000 ரூபா நாள் சம்பளம் என்பது மிகவும் குறைந்த சம்பளமாகும். இந்த 1000 ரூபா சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தத்திற்கூடாக மேற்கொள்ளப்படாது, வேறாக பிரித்தெடுக்கப்பட்டு சம்பள நிர்ணய சபைக்கூடாக செய்யப்பட்டது.
இதனை காரணம் காட்டி உயர்த்தப்பட்ட 1000 ரூபா சம்பளத்தை எமது தொழிலாளர்களுக்கு வழங்காதிருக்க கம்பனிகள் தங்களது காரயங்களை காட்டத் தொடங்கி விட்டன.
எடுக்கப்படும் கொழுந்தின் அளவு கூட்டு ஒப்பந்தப்படி அந்தந்தத் தோட்டங்களில் உள்ள தொழிற்சங்க தோட்ட கமிட்டி தலைவர்களுடன் கலந்துரையாடியே அதிகரிக்கப்பட முடியும்.
ஆனால் இன்று கம்பனிகள் தாம் நினைத்த அளவினை அதாவது தொழிலாளர்கள் எடுக்க முடியாத அளவினை நிர்ணயித்து அதற்கு குறைவான அளவு கொழுந்து, இறப்பர் பால் எடுக்கும் பட்சத்தில் ½ பேர் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிலாளர் சம்பள உயர்விற்கு முன்னர் எடுத்த சம்பள அளவினை விட தற்போது குறைந்த சம்பளத்தையே வருமானமாக பெருகின்றார்கள்.
அதுமட்டுமல்ல, தோட்டங்களில் தொழிலாளர்களில் நிரந்தர தொழிலை இல்லாமல் செய்ய முறைசாரா முறையினை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தோட்டம் துப்புரவு செய்தல், அதிகமான தோட்டங்களில் இன்று கைக்காசுக்கு வழங்கப்படுகின்றது. இதுமட்டுமல்ல சில தோட்டங்களில் கொழுந்து எடுப்பது கூட துண்டு காணிகள் பிரித்து கொடுத்து எடுக்கப்படுகின்றது.
இதன் மூலம் தொழிலாளர்கள் இவ்வளவு காலமாக அனுபவித்து வந்த சகல தொழில் உரிமைகளையும் இழக்கின்றனர். குறிப்பாக EPF, ETF, பிரசவ சகாயநிதி, நட்டஈடுகள் மற்றும் சேவாகால பணம் போன்ற பல்வேறு தொழில் உரிமைகளும் நீக்கப்படுகின்றன.
இன்று தோட்டங்கள் கம்பனிகள் வைத்த சட்டத்திற்கே இயங்குகின்றன. யார் பெருந்தோட்டத்தை ஆட்சி செய்கின்றார்கள் எனப் புரியவில்லை. தேயிலை, இறப்பர் கம்பனிகள் 53 வருட கால குத்தகைக்கு தோட்ட முகாமைத்துவத்தை வாங்கின. அதற்கு அர்த்தம் தொழிலாளர்கள் அவர்களின் சொத்து என்பதல்ல, தொழிலாளர்களை அவர்கள் நினைத்தது போல அடிமைகளாக நடத்துவதற்குமல்ல.
அரசின் அனுமதியுடனே இக்கம்பனிகள் பெருந்தோட்டத் துறைக்குள் வந்தன. இக்கம்பனிகளின் கடமை இந் நாட்டில் உள்ள சகல தொழில் உரிமைகளையும் பின்பற்றுவது. அதனை இக் கம்பனிகள் செய்யத் தவறும் பட்சத்தில் அரசு தலையிட்டு தொழிலாளர்களுக்கெதிரான தொழில் உரிமை மீறல்களை தடுக்க வேண்டும். தற்போது இவ்வளவு அராஜகம் நடக்கும் போது எதுவும் தெரியாதது போல பாராமுகமாக இருப்பதும் மற்றுமொரு அராஜகமாகும்.
பெருந்தோட்டத் துறை தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லாது இந்நாட்டில் வாழ்கின்றார்கள். வீட்டு உரிமை, உடல்நல பாதுகாப்பு உரிமை என்று பல்வேறு உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் இன்று தொழில் உரிமையும் முற்றாக மறுக்கப்படுகின்றது.
கூட்டு ஒப்பந்தம் மட்டும் இவர்களின் பிரச்சினைக்கு தீர்வாகுமா? இல்லை. கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சகல உரிமை மீறல்களுக்கும் தீர்வாகாது. தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஓரளவு மட்டுமே தீர்வு அதில் உள்ளது. பல இடைவெளிகள் கூட்டு ஒப்பந்தத்திலும் உள்ளன. அவை நிரப்பப்பட வேண்டும். இல்லையெனில் பெருந்தோட்டத் துறைக்கான ஒரு விசேட தொழில் சட்டம் உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்.
பெருந்தோட்டத் துறைசார்ந்த தொழில் சட்டம் உருவாகும் இடங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் சகல பொறிமுறைக்குள்ளும் பெருந்தோட்ட தொழிலாளர் சிந்தனை உடைய பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாக பெருந்தோட்டங்களில் வேலை செய்து வரும் அனைத்து தொழிலாளர்கள் தொடர்பாகவும் சட்டத்தை வலுவூட்டி அவர்களுக்கு சட்டத்தின் மூலமான சமத்துவமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மேனகா கந்தசாமி
ஆலோசகர்,செங்கொடி சங்கம்
