” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். கூட்டு ஒப்பந்தத்துக்கும், பட்ஜட் முன்மொழிவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.” – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 தை மாதம் முதல் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் 2021 தை மாதம் முதல் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற முன்மொழிவை பிரதமர் முன்வைத்துள்ளார்.
ஆனால் அந்த முன்மொழிவு – உறுதிமொழியானது பாட்டி வடை சுட்ட கதையாக இருக்ககூடாது. ஏற்கனவே அந்த கதைகளைக் கேட்டுவிட்டோம். எனவே, எவ்வித நிபந்தனையும் இன்றி அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். தொழில் சுமைகள் அதிகரிக்கப்படக்கூடாது.
கூட்டு ஒப்பந்தம் என்பது வேறு, அரசு வழங்கியுள்ள உறுதிமொழி வேறு. எனவே, அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றவேண்டும். கூட்டு ஒப்பந்தத்தை நாம் பார்த்துக்கொள்கின்றோம். ” – என்றார்.
https://www.facebook.com/api.official.lk/videos/432819831451721
