பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் வடிவேல் சுரேஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மேற்படி சந்திப்பு குறித்து வினவியபோதே ஜீவன் மேற்கண்டவாறு கூறினார்.
” சம்பள உயர்வு தொடர்பில் தொழில் அமைச்சரிடம் பேசினோம். ஆயிரம் ரூபாவுக்கு குறைவான எந்தவொரு சம்பள உயர்வையும் ஏற்பதற்கு நாம் தயாரில்லை. கம்பனிகளும் அவர்களின் முடிவில் உறுதியாக உள்ளனர். எதுஎப்படி இருந்தாலும் 28 ஆம் திகதிக்கு முன்னர் முடிவொன்றுக்கு வரவேண்டும். நல்ல முடிவு வரும். அதற்கான அழுத்தங்கள் கம்பனிகளுக்கு கொடுக்கப்படும்.” – என்றார்.