“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கொழும்பில் இன்று (24) காலை நடைபெற்ற சம்பள நிர்ணய சபைக் கூட்டத்தில் பெருந்தோட்ட கம்பனிகள் பங்கேற்கவில்லை என்பதால் பேச்சு நடைபெறவில்லை.”
இவ்வாறு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தொழிற்சங்க சார்பில் கலந்து கொள்ளும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் இரண்டாவது முறையாகவும் பெருந்தோட்ட கம்பனிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாது புறக்கணித்துள்ளன.
இந்த நிலையில் இவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் மீதும் சம்பள விடயத்திலிலும் எதுவித அக்கறையும் காட்டவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.
இந்த விடயத்தில் கம்பனிகாரர்களை மாத்திரம் குறை கூறுவதற்கு அப்பால் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களை புறம்தள்ளி பார்க்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த முறை இடம்பெற்ற தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை கம்பனிகள் புறக்கணித்தமையை அடுத்து இந்த விடயம் சம்பள நிர்ணய சபைக்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கான பேச்சு வார்த்தைக்கு (24) இன்று திகதி குறித்துமிருந்தது.
ஆனால் சம்பள நிர்ணய சபையில் இன்று சம்பள பிரச்சினை பேசுவதற்கு தொழிற்சங்க சார்பில் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்கள் சபைக்கு சென்றிருந்த நிலையில் அங்கு தோட்ட முதலாளிகள்மார் பக்கத்தில் ஒரு உரிமையாளர் மாத்திரமே கலந்து கொண்டிருந்தார். ஏனைய கம்பனி முதலாளிமார்கள் கலந்து கொள்ளவில்லை.
இதன் காரணமாக பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என்பதுடன் இது தொடர்பாக தொழில் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் சம்பள நிர்ணய சபையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இச்சபையின் செயலாளர் அழைப்பு விடுத்தால் கம்பனிகள்,தொழிற்சங்கங்கள் வந்து கலந்து கொண்டு பேச்சு நடத்த வேண்டும் ஆனால் கம்பனிகள் வரவில்லை இது எமக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் அரசாங்கம் பெருந்தோட்ட கம்பனிகளின் செல்லப்பிள்ளை மாறியுள்ளதாகவும்,பெருந்தோட்ட தொழிலாளர் மக்களுக்கு அரசாங்கமும் அநீதி இழைத்துள்ளது.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆ.ரமேஷ்
