ஏற்றுமதி பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார முறைமையே இலங்கையின் பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக கண்டி மாவட்டம் முழுவதும் இ.தொ.காவின் சார்பில் பாரத் அருள்சாமி தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
கண்டியில் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“வரி வருமானம் மற்றும் பணம் அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்களே இலங்கையில் வருமான வழிமுறைகளாக இருந்துவந்துள்ளன. நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு இதுகூட பிரதான காரணமாக அமைந்தது. எனினும், பணம் அச்சிடுவதை ஜனாதிபதி நிறுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல ஏற்றுமதி பொருளாதாரம்மூலம் பொருளாதாரத்தை மீட்பதற்குரிய திட்டங்களை வகுத்து செயல்படுத்திவருகின்றார். இதுவே காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. அதேபோல நடைமுறைக்கு சாத்தியமான, நிறைவேற்றக்கூடிய விடயங்களையே ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்துள்ளார்.
ஆனால் ஏனைய வேட்பாளர்கள் வாக்கு வேட்டையை மாத்திரம் இலக்கு வைத்து தேர்தல் விஞ்ஞாபனங்களில் உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர். அவர்கள் கூறியுள்ள விடயங்களை செய்யபோனால் நாட்டில் மீண்டும் பொருளாதார ஸ்தீரமற்ற நிலைமை ஏற்படும். வரிசை யுகம் ஏற்படும். அதைத் தருவோம், இதைத்தருவோம் எனக் கூறுபவர்கள், எப்படி தருவோம் எனக் கூற மறுக்கின்றனர். அதில் இருந்தே அவர்களின் மோசடி அரசியல் புரிகின்றது. எனவே, வாக்குகளுக்காக பொய் உறுதிமொழிகளை வழங்கும் வேட்பாளர்களை நம்பினால் நாடும், நாமும் படுகுழிக்குள்தான் விழ வேண்டிவரும்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்குநர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணப்பாடுகளின் அடிப்படையில் சில வருடங்களுக்கு கட்டாயம் பயணிக்க வேண்டியுள்ளது. அதற்கேற்ற வகையிலேயே ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கையை நோக்கி நகர்வதற்குரிய திட்டங்களை ஜனாதிபதி வகுத்துள்ளார். ஏற்றுமதி பொருளாதாரம் எனப்படும்போது எமது பெருந்தோட்டத்துறையும் உள்வரும். அதன்மூலம் எமது மக்களுக்கும் நிச்சயம் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
அதேவேளை இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஒரே தேர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான். அதுமட்டுமல்ல எமது பெரும்பான்மையின சகோதரர்களும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கின்றனர். எனவே, இன்னும் ஐந்தாண்டுகள் ஆள்வதற்குரிய ஆணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவோம் என உங்களில் ஒருவனாக உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.