தென்மேற்கு பாகிஸ்தானின் பலுகிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் துப்பாக்கிதாரிகளால் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
நிலக்கரி சுரங்கப் பணியாளர்களின் தங்குமிடத்திற்குள் நேற்றுக் காலை நுழைந்த தாக்குதல்தாரிகள் பணியாளர்களை சுற்றிவளைத்து சூடு நடத்தியுள்ளனர். டுக்கி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு 22 சடலங்கள் வந்திருப்பதோடு ஆறு பேர் சிகிச்சை பெற்று வருவதாக அங்குள்ள ரோய்ட்டர்ஸ் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பணியாளர்கள் ரொக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் போன்ற கனரக ஆயுதங்களால் தாக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரிகள் சுரங்கத்தின் இயந்திரங்கள் மீது தீ வைத்துள்ளனர்.
இந்தத் தாகுதலுக்கு உடன் எந்தத் தரப்பும் பொறுப்பேற்காதபோதும், பிரிவினைவாத பலுகிஸ்தான் விடுதலைப் படை மாகாணத்தில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.