இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு வலுவானதொருஅமைச்சுப்பதவியொன்று வழங்கப்படவுள்ளது என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
குறித்த அமைச்சானது பிரதமரின்கீழ் இருக்கும் என்பதால் இராஜாங்க அமைச்சுப்பதவியை வகிப்பவருக்கு நிதி உட்பட முழு அதிகாரத்தையும் சுயாதீனமாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்பதுடன் பிரதமர் ஊடாக அமைச்சரவைக்கு பத்திரங்களை முன்வைக்ககூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்கு 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு இம்முறையே அமோக வெற்றி கிடைத்துள்ளது. ஜீவன் தொண்டமான் தலைமையிலேயே மொட்டு அணி தேர்தலை எதிர்கொண்டது. இந்நிலையில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று ஜீவன் தொண்டமான் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார்.
அவருக்கு பிரதி அமைச்சு பதவியொன்றை வழங்குவது பற்றியே முன்னதாக பரீசிலிக்கப்பட்டது. ஆனால், மாவட்டத்தில் முதலிடம், அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்படும் கௌரவம் , இளம் தலைமைத்துவம் என்பது உட்பட மேலும் சில காரணங்களைக்கருத்திற்கொண்டு முழு அதிகாரம் கொண்ட வலுவான அமைச்சுப் பதவியை 26 வயதிலேயே வழங்குவதற்கு அரசாங்க உயர்மட்டம் தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 12 ஆம் திகதி ஜீவன் தொண்டமான் இராஜாங்க அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, பிரதமரின்கீழ்தான் தற்போது இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அமையவுள்ள புதிய அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் கைவசமுள்ளது. எனவே, அமைச்சு பதவிகள் தொடர்பில் எவரும் நிபந்தனைகளை முன்வைக்கமுடியாத சூழ்நிலையும் காணப்படுகின்றது. அப்படி இருந்தும் ஜீவனுக்கு வலுமானதொரு அமைச்சு பதவியை வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானமானது மலையக மக்களுக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரமாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.










