பசறை நகரில் 1,214 மதனமோதக மாத்திரைகள் பறிமுதல்!

பசறை நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத விற்பனை நிலையம் ஒன்றில், பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பபட்டு வந்த 374,200 ரூபா பெறுமதியான 1,214 மதனமோதக மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடையின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

17 ஆம் திகதி பிற்பகல் வேளையில் பசறை பொலிஸாரால் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பசறை நகரில் உள்ள குறித்த ஆயுர்வேத விற்பனை நிலையத்தில், எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி பல்வேறு வர்த்தகப் பெயர்களின் கீழ் மதனமோதக பக்கட்டுகள் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு விற்கப்படுவதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது.

இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, ஒரு பெட்டியில் 25 பொதிகள் வீதம் அடைக்கப்பட்டிருந்த 48 மதனமோதக பெட்டிகளும் (1,200 பொதிகள்), திறந்து சில்லறையாக விற்பனை செய்யப்பட்டு வந்த மற்றொரு பெட்டியில் இருந்த 14 பொதிகளும் என மொத்தம் 1,214 மதனமோதக பொதிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனை நடத்திய அதிகாரிகள்:

ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன, பதுளை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேசேன மற்றும் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமைப் பொலிஸ் பரிசோதகர் ரத்னசிறி பண்டார ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

பொலிஸ் சார்ஜென்ட்களான செனவிரத்ன (54251), சித்தீக் (5004), சுஜீவ (46592), கமல் (69512) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கபுகொட்டுவ (82972) ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கடை உரிமையாளரையும், பறிமுதல் செய்யப்பட்ட மதனமோதக மாத்திரைகளையும் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

R.T பசறை

Related Articles

Latest Articles