கொழும்பு நகரில் நேற்று (06) பிற்பகலில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குக்கு பிரதான காரணம் ஒரு மணித்தியாலத்திற்கு 129 மி.மீ அளவில் அதிகப்படியான மழைவீழ்ச்சி பதிவானமையாகும் எனவும், தற்போதுள்ள வடிகான் மற்றும் நீர்வடிகால் அமைப்பு என்பன ஒரு மணித்தியாலத்திற்கு 30 மி.மீ அளவிலான மழைவீழ்ச்சிக்கு மாத்திரம் தாக்குப் பிடிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது கொழும்பு மாநகர சபை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைய, இவ்வாறான அவசர நிலைகளை வினைத்திறனாகவும் துரிதமாகவும் எதிர்கொள்வதற்காக, கொழும்பு மாநகர சபையின் வழிகாட்டலின் கீழ் முப்படையினர், பொலிஸார் மற்றும் உரிய நிறுவனங்களை ஒன்றிணைத்து விசேட செயற்பாட்டுக் குழு ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவுறுத்தல் வழங்கினார்.
கொழும்பு நகரில் அவசர நீர் தேங்கும் நிலைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய உடனடித் தீர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
தேவைக்கேற்ப வடிகான் மற்றும் நீர்வடிகால் அமைப்புகளை மேம்படுத்துவதற்காக குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களைத் தயாரித்து செயற்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
முறையற்ற விதத்தில் கழிவுகளை அகற்றுவதன் காரணமாக நீர் வெளியேறும் சில வடிகால் அமைப்புகளும் கால்வாய்களும் அடைபட்டுள்ளதாக இதன்போது தெரியவந்ததுடன், நீர் ஒழுங்காக வெளியேறுவதற்கு தடையாக உள்ள வடிகால் அமைப்புகள் மற்றும் நீர் வழிந்தோடும் வழிகளை உடனடியாகத் சுத்தப்படுத்துவதற்கும், முறையற்ற விதத்தில் கழிவுகளை அகற்றும் நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.
கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் காணப்படும் சட்டவிரோத கட்டுமானங்கள் காரணமாக நீர் வெளியேறும் சில வடிகான் அமைப்புகளும் கால்வாய்களும் அடைபட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது. அந்தச் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றி, சம்பந்தப்பட்ட தரப்பினரை வேறு தகுந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான திட்டங்களைத் தயாரித்து உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான தேவையையும், கழிவுகளை முறையாக அகற்றுவது மற்றும் நீர் வடிந்தோடும் வழிகளை சுத்தமாக பேணுவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அவசியமான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
கொழும்பு மாநகர மேயர் விராய் கெலி பல்தசார் , ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ செயலணியின் செயலாளரும் அழைப்பாளருமான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (க்ளீன் ஸ்ரீ லங்கா) பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கலாநிதி ஆசிரி கருணாவர்தன, பிரதி மேயர் ஹேமந்த குமார, நகர ஆணையாளர் பொறியியலாளர் ஏ.டி.எஸ். ரோஹண, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஆர்.எம்.எஸ். பண்டாரநாயக்க, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் (ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்) எம்.கே.டி.பி. மாபலகம, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் எம்.ஜி. ஹேமச்சந்திர, முப்படை மற்றும் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் “க்ளீன் ஸ்ரீ லங்கா” செயலணியின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.










