தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இலங்கைக்கான இந்திய தூதுவரை அண்மையில் சந்தித்து கலந்துரையாடிய வேளையிலும் இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கூட்டமைப்பு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை டில்லிக்கு அழைத்து பேச்சு நடத்துவதற்கு பிரதமர் மோடி, குறுகிய கால பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்தபோது விருப்பம் வெளியிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றாலும் பயணம் பிற்போடப்பட்டது.
எனினும், இந்தியாவின் தலையீட்டுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம், புதிய அரசமைப்பின் ஊடாக மாற்றியமைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய அரசமைப்பின் ஊடாக தமிழர்களுக்கான தீர்வை பெறுவதற்கு டில்லியின் தலையீட்டை கூட்டமைப்பு கோரவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு டில்லி இராஜதந்திர மட்டத்திலான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
கூட்டமைப்பின் கோரிக்கைக்கு டில்லி தரப்பில் இருந்தும் இன்னும் பச்சைக்கொடி காட்டப்படவில்லை. கொழும்புடனான உறவைக்கருத்திற்கொண்டு கூட்டமைப்புடனான நேரடி சந்திப்பை பிரதமர் மோடி தவிர்த்தால்கூட விசேட பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்பக்கூடும் எனவும் இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.