” ஒற்றையாட்சி, புதிய அரசமைப்பு மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பன தொடர்பில் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் என்னவென்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.”- என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டமை மிகவும் நல்ல விடயமாகும். ஏனெனில் அன்று இந்திய எதிர்ப்புக் கொள்கையை கடைபிடித்துவந்த ஜே.வி.பியினர் இன்று ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் பேசப்பட்ட விடயங்கள் என்னவென்பது தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, நாடு திரும்பியகையோடு தெளிவுபடுத்த வேண்டும்.
இலங்கையில் சமஷ்டி முறைமையை ஏற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார். நல்லாட்சி (2015-2019) காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்பு பணி இறுதிப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்துள்ளது. அந்த அரசமைப்பு ஒற்றையாட்சியை கைவிடும் வகையிலான அரசமைப்பாகும்.
இலங்கையின் ஒற்றையாட்சி, உத்தேச புதிய அரசமைப்பு அதேபோல புதிய அரசமைப்பு இயற்றப்படும்வரை அமுலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுலாக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இவை தொடர்பில் இந்திய தரப்பில் கூறப்பட்ட விடயங்கள் எவை. இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.”- என்றார்.










