அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரமானது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். எனவே, 13 இல் இருந்து அந்த அதிகாரத்தை நீக்குவதற்கான அரசமைப்பு திருத்த யோசனை விரைவில் முன்வைக்கப்படும் – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். எனினும், பொலிஸ் அதிகாரம் குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக நாளை புதன்கிழமை சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையிலேயே 13 தொடர்பில் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார் உதய கம்மன்பில.
” அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் வாக்குகளை ஜனாதிபதி இலக்கு வைத்துள்ளார். இதன்பொருட்டே 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளார்.
இது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காகவே கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரிவினைவாதம் செயற்படும் நிலையில், பொலிஸ் அதிகாரம் பற்றி பேசுவது ஆபத்தானது.
13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து பொலிஸ் அதிகாரத்தை நீக்குவது தொடர்பான அரசமைப்பு திருத்தச்சட்டமூலம் அடுத்தவாரம் முன்வைக்கப்படும். அதற்கான சட்டமூலம் சட்டத்தரணிகள் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.” – எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.