அரசமைப்பில் இருந்து 13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்நாடு பற்றி எரியக்கூடும் என்று டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
” 13ஆவது திருத்தச்சட்டம் என்பது அரசமைப்பில் உள்ள ஓர் அங்கம். அன்று முதல் இன்றுவரை அதனை நான் ஆதரித்துவருகின்றேன். வடக்கு, கிழக்கு மாகாணம் இணைந்திருந்தவேளை காணி அதிகாரம் தொடர்பில் எனக்கு கவலை இருந்தது. தற்போது அந்த கவலையும் இல்லை.
நான் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரிப்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் இருப்பதாக கருதிவிடவேண்டாம்.
தற்போதைய சூழ்நிலையில் 13 ஐ அமுல்படுத்தாவிட்டாலோ அல்லது மாகாணசபை முறைமையை இல்லாதொழித்துவிட்டாலோ இந்நாடு பற்றி எரியும். எனவே, 13 ஐ அடிப்படையாகக்கொண்டுதான் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட வேண்டும். இந்த முயற்சியின்போது அரசியல் ‘கேம்’களுக்கு இடமளிக்க கூடாது.” – எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.










