அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் தமது கட்சிகளின் நிலைப்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தியும், ஜே.வி.பியும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கஉரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று 2ஆவது நாளாகவும் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மூத்த அமைச்சரான நிமல் சிறிபாலடி சில்வா, அரசின் சார்பில் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 13 ஆவது திருத்தச்சட்டம். அரசமைப்பின் ஓர் அங்கம். 13 முழுமையாக அமுல்படுத்தப்படும் என பலரும் கூறியுள்ளனர். 13 பிளஸ் உறுதிமொழிகூட வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஜனாதிபதியின் அறிவிப்பு புதிய விடயம் அல்ல.
13 தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்னவென்று கேட்க விரும்புகின்றோம். இது விடயத்தில் ஒளிந்து விளையாடாமல் வெளிப்படையாக முடிவை அறிவிக்க வேண்டும். ஆனால் விவாதத்தில் பங்கேற்காமல் அவர்கள் இது விடயத்தில் இரட்டை அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.
நாட்டுக்காகவே ஜனாதிபதி முடிவுகளை எடுத்துவருகின்றார். அதனால்தான் அவரை ஆதரிக்கின்றோம். இதனால் எமது அரசியல் இருப்புக்கும் சிக்கல் வரலாம்.” – என்றார்.
